உலகளாவிய காரணிகள் சந்தையை பாதிப்பு:
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் ஸ்தம்பித்துள்ளது போன்ற காரணங்களால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100-ஐ தாண்டி உயர்ந்துள்ளது. இந்தியா போன்ற இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளுக்கு, எண்ணெய் விலை உயர்வு என்பது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கும் மற்றும் பணவீக்க அழுத்தத்தை தூண்டும் என அஞ்சப்படுகிறது.
ரூபாய் வீழ்ச்சி மேலும் கவலை அளிக்கிறது:
இந்திய ரூபாயும் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது, ரூபாய் மதிப்பு சரிந்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகும். இதனால், நிறுவனங்களின் லாப வரம்புகள் (Margins) பாதிக்கப்படலாம். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
எந்தெந்த துறைகள் பாதிப்பு?
நிதி (Financials) மற்றும் ஆட்டோமொபைல் (Auto) துறைகள் இன்றைய வீழ்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டன. நிஃப்டி ஆட்டோ குறியீடு 1.3% சரிந்தது. ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) போன்ற முன்னணி வங்கிப் பங்குகளின் வீழ்ச்சி, சந்தை குறியீடுகளை மேலும் கீழ்நோக்கி இழுத்தது. இருப்பினும், பார்மா (Pharma) துறையைச் சேர்ந்த பங்குகள் சற்று ஆறுதல் அளித்தன. இந்தத் துறை குறியீடு 2.3% உயர்ந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன்:
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியப் பங்குகளில் இருந்து தொடர்ந்து பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். இந்த ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் $4.3 பில்லியன் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இது $18.5 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்திய சொத்துக்கள் மீது எச்சரிக்கையாக இருப்பதைக் காட்டுகிறது.
ஹெச்பிசி-யின் கணிப்பு பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது:
மேலும், ஹெச்பிசி (HSBC) வங்கி இந்தியப் பங்குகளை 'அண்டர்வெயிட்' (Underweight) என தரமிறக்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, நிறுவனங்களின் வருவாயை (Earnings) பாதிக்கக்கூடும் என்றும், எண்ணெய் விலை உயர்வாகவே நீடித்தால் தற்போதைய மதிப்பீடுகளை நியாயப்படுத்துவது கடினம் என்றும் எச்சரித்துள்ளது. ஹெச்பிசி கணிப்பின்படி, கச்சா எண்ணெய் விலையில் 20% உயர்வு ஏற்பட்டால், அது நிறுவனங்களின் வளர்ச்சி கணிப்புகளில் 1.5% புள்ளிகளைக் குறைக்கக்கூடும். இது எரிசக்தி செலவுகள் இந்திய நிறுவனங்களின் லாபத்தை எவ்வளவு பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது.
