எளிமையாகும் வரி விதிப்பு: CBDTயின் புதிய அறிவிப்பு
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய வருமான வரி சட்டம் 2025 (Income Tax Act, 2025) -க்கான வரைவு விதிகளை வெளியிட்டு, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக்களைக் கோரியுள்ளது. ஆகஸ்ட் 2025-ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற இந்த முக்கிய சட்டத் திருத்தம், நேரடி வரி விதிப்பு முறையை எளிமையாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரைவு விதிகள் மற்றும் படிவங்கள் (Forms) தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
தற்போதுள்ள 1961 சட்டத்துடன் ஒப்பிடும்போது, புதிய வருமான வரி சட்டம் 2025 பல மாற்றங்களுடன், மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தமுள்ள 47 அத்தியாயங்கள் 23 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 819 பிரிவுகள் (Sections) 536 பிரிவுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், அட்டவணைகள் (Tables) 57 ஆகவும், சூத்திரங்கள் (Formulas) 36 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த மறுசீரமைப்பு, வரி செலுத்துவோருக்கு தாக்கல் செய்வதை மேலும் சுலபமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களின் கருத்துக்கள் அவசியம்
குறிப்பாக, சட்ட மொழியை மேலும் எளிமையாக்குதல், வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் (Reduce Litigation), வரி தாக்கல் செய்வதற்கான சுமையைக் குறைத்தல் (Lower Compliance Burden), மற்றும் காலாவதியான அல்லது தேவையற்ற விதிகள்/படிவங்களை கண்டறிதல் போன்ற நான்கு முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் அளிக்கலாம். இதற்காக, இ-ஃபைலிங் (e-filing) இணையதளத்தில் ஒரு பிரத்யேக வசதி (Utility) தொடங்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு பரிந்துரையும், எந்த விதி, துணை விதி அல்லது படிவத்தைப் பற்றியது என்பதையும், எந்தப் பிரிவின் கீழ் வருகிறது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று CBDT கேட்டுக்கொண்டுள்ளது.