PF பண எடுக்கும் விதிமுறைகளில் மாற்றம்
Employees' Provident Fund Organisation (EPFO) வெளியிட்டுள்ள புதிய PF விதிகள், ஊழியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இனி உங்கள் PF கணக்கில் உள்ள மொத்த இருப்பில் 25% தொகையை ஓய்வு பெறும் வரை எடுக்க முடியாது.
நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பை ஊக்குவிக்கவும், அவசர தேவைகளுக்காக பணத்தை எடுப்பதை (impulsive withdrawals) குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக EPFO அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே உள்ள 8.25% வட்டி விகிதம் அப்படியே தொடரும் என்றும், இது காம்பவுண்டிங் மூலம் உங்கள் சேமிப்பை பெருக்க உதவும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பு இருந்த 13 வகையான PF பண எடுக்கும் முறைகளை, இப்போது 3 முக்கிய பிரிவுகளாக EPFO சுருக்கியுள்ளது: அத்தியாவசிய தேவைகள் (Essential Needs), வீட்டு தேவைகள் (Housing Needs), மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் (Special Circumstances).
விமர்சகர்கள் சொல்வது என்ன?
ஆனால், இந்த 25% லாக்கின் விதி பலரின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக, வேலை இழப்பு போன்ற நெருக்கடியான காலங்களில், தங்கள் சொந்த பணத்தை எடுப்பதில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருப்பது 'அதிகாரத்துவ சிரமத்தை' (bureaucratic hardship) ஏற்படுத்துவதாகவும், இதனால் சிலர் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்றும் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பண எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகள்
புதிய விதிகளின்படி, வேலை இழப்பு ஏற்பட்டால், PF இருப்பில் 75% வரை உடனடியாக எடுக்க முடியும். மீதமுள்ள 25% தொகையை எடுக்க, வேலையில்லாமல் 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு, முழு தொகையையும் எடுக்க 2 மாதங்கள் காத்திருந்தாலே போதும்.
அதுபோலவே, எம்ப்ளாயீஸ் பென்ஷன் ஸ்கீமில் (EPS) இருந்து பணம் எடுக்க, பங்களிப்பு நின்ற பிறகு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதுவும் முந்தைய 2 மாத கால அளவிலிருந்து பெரிய மாற்றமாகும். குடும்ப ஓய்வூதியத்தை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்கிறது EPFO.
EPFO-ன் இந்த மாற்றங்கள், நிறுவனத்தின் நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மையையும், முதலீட்டு திறனையும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும், அவசர காலத்தில் உறுப்பினர்களுக்கு பண தேவை இருக்கும் போது, இந்த கட்டுப்பாடுகள் பெரிய சவாலாக அமையும் என பலரும் கருதுகின்றனர். இது ஒருபுறம் சேமிப்பை ஊக்குவித்தாலும், மறுபுறம் உறுப்பினர்களின் உடனடி பணத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக ஒருமித்த கருத்து நிலவுகிறது.
