அதானி வாரிசின் அசத்தல் வளர்ச்சி
கௌதம் அதானியின் மகனான கரண் அதானி, ASK பிரைவேட் வெல்த் ஹுரூன் இந்தியா சக்சஸர்ஸ் 50 பட்டியலில், சொத்து சேர்த்ததில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். அதானி போர்ட்ஸ் & SEZ லிமிடெட் (APSEZ) நிறுவனத்தின் கீழ் இவரது தலைமை, ₹2.67 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது. முன்பு ₹42,149 கோடியாக இருந்த இவரது பங்கு, தற்போது ₹3.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது வியக்கத்தக்க வகையில் 7.3 மடங்கு வளர்ச்சி. வெறும் இரண்டு துறைமுகங்களைக் (Ports) கொண்ட நிறுவனமாக இருந்த APSEZ, தற்போது ஒரு பெரிய லாஜிஸ்டிக்ஸ் ஜாம்பவானாக இவரது உத்திகளால் மாறியுள்ளது.
அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு அங்கீகாரம்
இந்த ஹுரூன் இந்தியா சக்சஸர்ஸ் பட்டியல், 49 வயதுக்குட்பட்ட தலைசிறந்த வாரிசுகள், தங்கள் குடும்பத் தொழில்களை வெற்றிகரமாக நிர்வகித்து, பெரும் வளர்ச்சியை அடைந்தவர்களை கௌரவிக்கிறது. மார்ச் 2020 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் அடைந்த அபார வளர்ச்சி இந்த பட்டியலில் முக்கியத்துவம் பெறுகிறது. ASK பிரைவேட் வெல்த் ஹுரூன் இந்தியா பெர்ஃபார்மன்ஸ் இண்டெக்ஸ் (Performance Index) உதவியுடன், நிதி, செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை (Sustainability) போன்ற பல பிரிவுகளில் நிறுவனங்களின் செயல்திறன் ஒப்பிடப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வாரிசுகள்
கரண் அதானிக்கு அடுத்தபடியாக, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆலோக் ஷாங்க்வி மற்றும் விதி ஷாங்க்வி சகோதரர்கள், இணைந்து ₹1.72 லட்சம் கோடி சொத்தை உருவாக்கியதற்காக இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் பிரியா அகர்வால் ஹெப்பர் ₹1.56 லட்சம் கோடி சொத்து சேர்த்ததுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த இளம் தலைவர்கள், தங்கள் பாரம்பரியத் தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களை வழிநடத்துவதில் சிறந்து விளங்குகின்றனர்.
