முக்கிய புள்ளிவிவரங்கள்
SBI ரிப்போர்ட், PLFS (Periodic Labour Force Survey) டேட்டாவை பயன்படுத்தி நடத்திய ஆய்வில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 9.9% ஆக பதிவாகியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் 10.9% ஆக இருந்தது. படிப்படியாக குறைந்து 2024ல் 10.3% ஆகவும், தற்போது 9.9% ஆகவும் வந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கணிப்பின்படி, உலக அளவில் இளைஞர்களுக்கான வேலையின்மை சராசரி 12.6% ஆகும்.
நகர்ப்புற vs கிராமப்புற
நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் குறைந்து வந்தாலும், அது கிராமப்புறங்களை விட அதிகமாகவே உள்ளது. 2022ல் 16.8% ஆக இருந்த நகர்ப்புற இளைஞர்களின் வேலையின்மை, 2025ல் 13.6% ஆக குறைந்துள்ளது. அதே சமயம், கிராமப்புறங்களில் இந்த விகிதம் 8-9% என்ற அளவில் நிலையாக உள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
மேலும், இந்த ஆய்வில் ஒரு முக்கிய காரணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, இளைஞர்கள் மத்தியில் உயர்கல்வி கற்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதும், வேலையின்மை விகிதம் குறைவாக காட்டப்படுவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். இதனால், 15-29 வயதுக்குட்பட்டோரின் பாரம்பரிய அளவீடுகள், சந்தையின் உண்மையான நிலையை முழுமையாக பிரதிபலிக்காமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட துறைகள்
இந்திய தொழிலாளர் சந்தை ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக, உற்பத்தித் துறை (Manufacturing) மற்றும் வேளாண்மை சாராத பிற துறைகளில் (Non-agricultural sectors) வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்து வருவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
