ஏன் இந்த சரிவு?
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 95 என்ற முக்கிய அளவைத் தாண்ட முக்கிய காரணங்களாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $100 டாலர்களுக்கு மேல் நீடிப்பது, வலுவடைந்து வரும் அமெரிக்க டாலர், மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் (FIIs) தொடர்ச்சியான வெளியேற்றம் ஆகியவை அமைந்துள்ளன. கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு $10 உயரும்போதும், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) 0.35% முதல் 0.50% வரை அதிகரிக்கிறது. இதனால் இறக்குமதியாளர்களுக்கு டாலருக்கான தேவை அதிகரிக்கிறது.
மேலும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதும், புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical Conflicts) காரணமாக அமெரிக்க டாலர் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதும் அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. மறுபுறம், FIIகள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை வெளியே எடுத்துள்ளனர். இதுவும் ரூபாயின் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது.
RBI-யின் தற்போதைய நடவடிக்கைகள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 1998ல் ஆளுநர் பிமல் ஜாலன் (Bimal Jalan) கையாண்ட அதே உத்தியை தற்போது பின்பற்றி வருகிறது. அந்நிய செலாவணி சந்தையில் வங்கிகளின் நிகர வெளிப்பொசிஷன்களை (Net Open Foreign Exchange Positions) ஒரு நாளைக்கு $100 மில்லியன் என வரம்பு நிர்ணயித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்கவும், சந்தைக்கு ஒரு தெளிவான சிக்னலை கொடுக்கவும் RBI எடுத்துள்ளது.
உதய் கோட்டக்கின் மாற்று யோசனை
கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோட்டக், RBI மற்றும் மத்திய அரசுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். அந்நிய நாணய டெபாசிட் திட்டமான (FCNR(B) scheme) அதன் பழைய வடிவத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டில், இதே FCNR(B) திட்டம் மூலம் $26 பில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டது. தற்காலிகமாக, டாலர் inflows-ஐ ஈர்க்க இது ஒரு சிறந்த கருவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த FCNR(B) திட்டம் போன்ற குறுகிய கால நடவடிக்கைகள் மட்டுமே போதாது என்றும், அடிப்படைப் பிரச்சனைகளான எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, மற்றும் ரூபாய் வர்த்தகத்தை ஊக்குவிப்பது போன்ற நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்களும் (Structural Reforms) அவசியம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், RBI மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் நம்பகத்தன்மை (Credibility) தான் ரூபாயின் ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியம்.