இந்தியாவின் GDP வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், 2047-க்குள் 'விக்சித் பாரத்' ஆக மாறுவதற்கும், பெண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை (FLFPR) கணிசமாக உயர்த்துவது இன்றியமையாதது. இது வெறும் சமூகக் குறிக்கோள் அல்ல, நாட்டின் முழு திறனையும் வெளிக்கொணரும் ஒரு முக்கிய பொருளாதார உத்தி என Axis Bank அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு பெண்ணியம் அவசியம்!
இந்தியா கணிசமான GDP வளர்ச்சியை, அதாவது 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற ஆண்டுக்கு 8% முதல் 10% வரை இலக்கு வைத்துள்ளது. இங்குள்ள பெண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை (FLFPR) வெறும் 10% அதிகரித்தால் கூட, இந்தியாவின் GDP-யை 16% வரை உயர்த்த முடியும். முழு பாலின இடைவெளியையும் (Gender Gap) மூடினால், GDP-யில் 27% வரை கூடுதலாக சேர்க்கலாம். தற்போதைய 2024 நிலவரப்படி, ஆண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 77.1% ஆக இருக்கும்போது, பெண்களின் விகிதம் 32.8% ஆக மட்டுமே உள்ளது. கடந்த காலங்களில், FLFPR 34.1% (1999-00) இல் இருந்து 27.2% (2011-12) ஆக குறைந்து, பின்னர் மீண்டும் ஏற்ற இறக்கங்களுடன் 23% முதல் 47.6% வரை பதிவாகியுள்ளது. இந்தப் பெண் சக்தி முழுமையாக பயன்படுத்தப்படாதது, பொருளாதார வளர்ச்சியை நேரடியாக பாதிக்கிறது.
தடைகளின் சுவர்
பெண்களின் முழுமையான பொருளாதார ஒருங்கிணைப்பைத் தடுக்கும் ஆழமான கட்டமைப்பு மற்றும் சமூகத் தடைகள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கவலைகள் முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன. பொது உள்கட்டமைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து, பணியிடங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால், பல பெண்கள் வெளியில் வர தயங்குகின்றனர். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற பொறுப்புகள் பெருமளவில் பெண்களின் மீதே சுமத்தப்படுகின்றன. மலிவான, தரமான குழந்தை பராமரிப்பு மையங்கள் இல்லாதது ஒரு முக்கிய இடைவெளியாக உள்ளது. மேலும், வீட்டிற்கு அருகில் வேலைவாய்ப்பின்மை, பணியிடங்களில் நெகிழ்வற்ற தன்மை போன்ற தேவைக் குறைபாடுகளும் உள்ளன. சமூக மரபுகளும் பெண்களின் வேலைக்குச் செல்வதை ஊக்கப்படுத்தாமல் உள்ளன. திருமணம் மற்றும் தாய்மைக்குப் பிறகு வேலைக்குத் திரும்புவது, கடினமான பணியமர்த்தல் நடைமுறைகள், திறன்கள் காலாவதியாதல் மற்றும் வயது பாகுபாடு போன்றவற்றால் சவாலாக உள்ளது. கல்வி அறிவு உயர்ந்திருந்தாலும், அது வேலைவாய்ப்பாக மாறவில்லை. பெரும்பாலான பெண்கள் விவசாயம் (60% க்கும் மேல்) அல்லது ஆடை உற்பத்தி போன்ற குறைந்த சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பு இல்லாத முறைசாரா துறைகளிலேயே அதிகமாக உள்ளனர்.
உலகளாவிய பின்னணியும் இழப்புகளும்
இந்தியாவின் FLFPR, ஜி20 மற்றும் தெற்காசிய நாடுகளிலேயே மிகக் குறைவாக உள்ளது. சில ஜி20 நாடுகள் பாலின இடைவெளியைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியா, 2012 முதல் 2024 வரை சில முன்னேற்றம் கண்டாலும், 2024 இல் பாலின வேலைவாய்ப்பு இடைவெளி 44.7% ஆக இருந்தது (ஆண்கள் 81.5%, பெண்கள் 36.8%). அதிக வருமானம் கொண்ட ஜி20 நாடுகளில் இது மிகவும் அதிகம். இந்தப் பாலின இடைவெளியால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் ஏராளம். பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் பணிபுரிந்தால், இந்தியாவின் GDP-யை மேலும் 60% அதிகரிக்கலாம். மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியை சரியாகப் பயன்படுத்தத் தவறினால், நாட்டின் உயர் வருமான நாடாக மாறும் கனவு பாதிக்கப்படும்.
சவால்களும் யதார்த்தமும்
இந்தியாவின் எதிர்கால பொருளாதாரக் கணிப்புகள், பெண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தில் கணிசமான மற்றும் நீடித்த அதிகரிப்பைச் சார்ந்துள்ளது. பல கொள்கை முயற்சிகள் (STEP, PMKVY, Stand-Up India, Mudra Yojana போன்றவை) இருந்தபோதிலும், ஆழமான சமூக மற்றும் கட்டமைப்பு தடைகள் வலுவாகவே உள்ளன. பாதுகாப்பு கவலைகள், சம்பளம் இல்லாத பராமரிப்புப் பணிகளின் சுமை ஆகியவை பெண்களை வேலைக்குச் செல்வதைத் தடுக்கின்றன. மகப்பேறு நலச் சட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் போன்ற அரசு விதிமுறைகள், பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவை அதிகரிக்கச் செய்து, முதலாளிகளுக்கு கூடுதல் தடைகளை உருவாக்கலாம். பெண்களுக்குக் கிடைக்கும் வேலைகளின் தரமும் ஒரு கவலையாக உள்ளது. அவர்கள் விவசாயம் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா துறைகளிலேயே அதிகமாக உள்ளனர். திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முதலாளிகளிடம் உள்ள பாரபட்சமும் சிக்கலை அதிகரிக்கிறது. சமூக மரபுகளில் அடிப்படை மாற்றம், குழந்தை பராமரிப்பு உள்கட்டமைப்பில் முதலீடு, பாதுகாப்புச் சட்டங்களின் பயனுள்ள அமலாக்கம் ஆகியவை இல்லாமல், எதிர்பார்க்கப்படும் பொருளாதார ஆதாயங்கள் வெறும் கனவாகவே இருக்கலாம்.
எதிர்காலப் பாதை
இந்தியாவின் FLFPR சவாலை எதிர்கொள்ள ஒரு பலமுனை உத்தி தேவை. பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துறைகளிலும், நெகிழ்வான வேலை வாய்ப்புகளிலும் வேலை உருவாக்கத்தை அதிகரிப்பது முக்கியம். மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய குழந்தை பராமரிப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட நகரப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான பயண வசதிகளில் முதலீடு செய்வது, வீட்டுப் பணிகளின் சுமையைக் குறைத்து வேலைக்குச் செல்வதை எளிதாக்கும். பெண்களுக்கான தலைமைத்துவப் பாதைகளை வலுப்படுத்துவதும், உள்ளடக்கிய பணியிட அமைப்புகளை உருவாக்குவதும் அவசியம். அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து செயல்பட்டு, சமூக மரபுகளை மாற்றியமைத்து, வளர்ந்து வரும் துறைகளில் பயிற்சி அளித்து, சமமான வாய்ப்புகளையும் ஊதிய சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும்.