நுகர்வோர் கவலைகள் என்ன?
எத்தனால், பெட்ரோலை விட ஆற்றலில் சுமார் 30% முதல் 35% வரை குறைவாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அதே பவருக்கு அதிக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால், குறிப்பாக E20க்கு இணக்கமில்லாத பழைய வாகனங்களில், மைலேஜ் (Fuel Economy) 2% முதல் 7% வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எத்தனால் தண்ணீரை உறிஞ்சி, எரிபொருள் அமைப்புகளில் அரிப்பை ஏற்படுத்தி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களை சேதப்படுத்தலாம் என்ற அச்சமும் உள்ளது. எனினும், ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) மற்றும் சொசைட்டி ஃபார் இந்தியன் ஆட்டோமொபைல் மானுஃபாக்சரர்ஸ் (SIAM) போன்ற அமைப்புகள், E20 பழைய வாகனங்களுக்கு பாதுகாப்பானது என்றும், தேய்மானம் பற்றிய கவலைகள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளன.
மாசு வெளியீட்டில் ஏற்படும் மாற்றங்கள்
E20 எரிபொருள் இன்ஜின் எரிப்பு செயல்முறையை மாற்றுகிறது. எத்தனாலின் ஆக்சிஜன் கலவை கார்பன் மோனாக்சைடு (CO), ஹைட்ரோகார்பன்கள் மற்றும் புகையைக் குறைத்தாலும், நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) மற்றும் தீங்கு விளைவிக்கும் அசிட்டால்டிஹைட் உமிழ்வுகளை அதிகரிக்கலாம். பிரேசில் போன்ற நாடுகளைப் போல, இந்த உமிழ்வுகளைக் கண்காணிக்க இந்தியாவில் இன்னும் குறிப்பிட்ட தரநிலைகள் இல்லை.
E20 பெட்ரோலை மேலும் எளிதில் ஆவியாகக்கூடியதாக மாற்றும். இது, குறிப்பாக பழைய கார்களில், எரிபொருள் ஆவி வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் கோடை காலங்களில் நிலவும் அதிக வெப்பம், எரிபொருள் கொதிக்கும் அபாயத்தை அதிகரித்து, ஆவி சுற்றுச்சூழலுக்குள் வெளியேற வழிவகுக்கும். இது தரைமட்ட ஓசோன் உருவாக பங்களிக்கும். இதுகுறித்து, பல நாடுகளை விட இந்தியாவின் மாசு உமிழ்வு தரநிலைகள் குறைவாகவே உள்ளன.
தொழிற்சாலைகளுக்கு தட்டுப்பாடு & உணவு-எரிபொருள் மோதல்
'எரிபொருள் தன்னிறைவு' என்ற இந்தியாவின் இலக்கு, தொழிற்சாலை எத்தனால் இறக்குமதிக்கு வழிவகுத்துள்ளது. போக்குவரத்துத் துறை உள்நாட்டு எத்தனாலைப் பயன்படுத்தும்போது, ரசாயனங்கள், மருந்துகள் மற்றும் பானங்கள் போன்ற தொழில்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த தேவை அதிகரிப்பு உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக சோளம் போன்ற பயிர்களுக்கான தேவை, கோழித் தொழிலைப் பாதிப்பதாகவும், உணவுக்கும் எரிபொருளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கரும்பு போன்ற அதிக நீர் தேவைப்படும் பயிர்களை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவது உள்ளூர் நீர் ஆதாரங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகளும் உள்ளன.
இந்த எத்தனால் கொள்கை, மின்சார வாகனங்கள் (EV) போன்ற பூஜ்ஜிய-உமிழ்வு தொழில்நுட்பங்களுக்கு மாறுவதை மெதுவாக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
மாற்று வழிகள் மற்றும் உலக நடைமுறைகள்
எத்தனாலை பெட்ரோலில் அதிக அளவில் கலப்பதற்குப் பதிலாக, அதை முக்கியமாக தொழிற்சாலை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். உணவு-எரிபொருள் மோதலைக் குறைக்க, விவசாயக் கழிவுகள் மற்றும் குப்பைகளிலிருந்து இரண்டாம் தலைமுறை (2G) எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்காக PM-JI-VAN யோஜனா போன்ற திட்டங்கள் உதவுகின்றன.
அமெரிக்கா போன்ற நாடுகள் பெட்ரோலில் 10-15% வரை மட்டுமே எத்தனால் கலக்க அனுமதிக்கின்றன. ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உணவுப் பயிர்களிலிருந்து பெறப்படும் பயோஃபியூல்களை அனுமதிப்பதில்லை, மாறாக 2G எரிபொருட்களை மட்டுமே அனுமதிக்கின்றன.