சீனா உடனான உறவு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் நீடித்தாலும், பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவுடன் தொடர்ந்து நெருக்கமாகவே உள்ளது. இதனால், இந்தியாவின் உலகளாவிய இலக்குகளுக்கும், நிதர்சனமான பொருளாதார நிலைக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. குறுகிய கால நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும், நீண்ட கால உலகளாவிய பங்கு மற்றும் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனை இந்தியா இழக்க நேரிடும்.
வர்த்தகப் பற்றாக்குறை உயர்வு
2025-26 நிதியாண்டில் மட்டும், சீனாவுடனான மொத்த வர்த்தகம் சுமார் $151.1 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட $99.2 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறையை தற்போது $112.6 பில்லியனாக கணிசமாக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளுடன் பதற்றம் நிலவினாலும், பொருளாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தியா இந்த நெருக்கமான உறவை கையாள்கிறது. இது, பிராந்திய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவை சார்ந்திருக்கும் முக்கிய துறைகள்
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு இது பெரும் தடையாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், ரசாயனங்கள் போன்ற முக்கிய துறைகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 30%-க்கும் மேல் சீனாவிலிருந்து வருகின்றன. குறிப்பாக, மருந்துப் பொருட்கள் தயாரிக்கத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள் (APIs), சூரிய மின்சக்திக்குத் (Solar Energy) தேவையான பாகங்கள், மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான (EV) பேட்டரிகள், தாதுக்கள் என பல அத்தியாவசிய தேவைகளுக்கு சீனா மீதே இந்தியா தங்கியுள்ளது. இது நாட்டின் பசுமை ஆற்றல் இலக்குகள் மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளது.
உற்பத்தித் துறையில் பின்தங்கும் இந்தியா
சீனாவின் உற்பத்தித் துறையில் சுமார் 30% பங்கு இருக்கும் நிலையில், இந்தியாவில் இது ஒரு தசாப்தமாக 1.8% முதல் 2.8% வரை மட்டுமே உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) உற்பத்தியின் பங்களிப்பு 17.2% ஆக மட்டுமே உள்ளது, இது 25% என்ற இலக்கை எட்டவில்லை. அரசின் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டங்கள் (Production Linked Incentives) பலன் தந்தாலும், பல அசெம்பிளிங் யூனிட்கள் இன்னமும் சீன பாகங்களையே சார்ந்துள்ளன. இதற்கிடையில், வியட்நாம், இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் பெரும் முதலீட்டை ஈர்த்து, உற்பத்தி மையங்களாக உருவெடுத்து வருகின்றன. வியட்நாம் வெளிநாட்டு முதலீட்டில் பெரும் வளர்ச்சி கண்டு, பல உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்கிறது. இது இந்தியாவின் உற்பத்தி இலக்குகளுக்கு பெரும் போட்டியாக அமைந்துள்ளது.
உலக அரங்கில் இந்தியா: வாய்ப்புகளும் சவால்களும்
சீனாவுடனான இந்த நெருங்கிய பொருளாதாரப் பிணைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், சீனாவுக்கு போட்டியாக நிற்கும் திறனையும் பலவீனப்படுத்துகிறது. விநியோகச் சங்கிலி (Supply Chain) தடங்கல்கள் ஏற்பட்டால், இந்தியா எளிதில் அழுத்தத்திற்கு உள்ளாகும். இது, உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை பாதிக்கலாம். உள்நாட்டு அரசியல் இமேஜை விட நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் பாதிக்கப்படும். தற்போதைய சூழலில், ஒரு சுதந்திரமான உலக சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை விட, சீன நலன்களுக்கு இசைந்து செல்லும் நிலை ஏற்படலாம். இதனால், தொழிற்துறை சுதந்திரம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றங்களிலிருந்து பயனடையும் வாய்ப்புகள் குறையக்கூடும்.
