இந்திய ஸ்டார்ட்-அப்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கள் தலைமை அலுவலகத்தை மீண்டும் இந்தியாவிற்கே மாற்றும் 'Reverse Flipping' அலையில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இந்த மாற்றம் நடக்கிறது.
தற்போது இந்திய ஸ்டார்ட்-அப் உலகில் 'Reverse Flipping' என்ற சொல் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு முன் சிங்கப்பூர் அல்லது டெலாவேர் போன்ற வெளிநாடுகளில் பதிவு செய்திருந்த பல முன்னணி நிறுவனங்கள், இப்போது மீண்டும் இந்தியாவிற்கே தங்களது சட்டபூர்வ முகவரியை மாற்றி வருகின்றன. PhonePe, Zepto, Flipkart, Razorpay, Meesho மற்றும் Pine Labs போன்ற நிறுவனங்கள் இந்த மாற்றத்தை மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு சந்தையில் IPO ஆர்வம்
முன்பெல்லாம் ஸ்டார்ட்-அப்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளில் பதிவு செய்தன. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள NSE மற்றும் BSE பங்குச் சந்தைகளில் IPO கொண்டு வரவும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெறவும் நிறுவனங்கள் விரும்புகின்றன. இந்திய சந்தையில் தற்போதுள்ள பணப்புழக்கம் (Liquidity) மற்றும் டெக் சார்ந்த பிசினஸ் மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இதற்கு முக்கிய காரணம்.
அரசின் புதிய விதிமுறைகள்
முன்பு வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவது பல வருடங்கள் எடுக்கும் சிக்கலான விஷயம். ஆனால், செப்டம்பர் 2024-ல் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, தற்போது 'Fast-track Inbound Merger' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் NCLT-ன் நீண்ட கால ஒப்புதல் பெறாமலேயே வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைக்க முடியும்.
கவனிக்க வேண்டிய சவால்கள்
இந்த மாற்றம் எளிதானது அல்ல. இதில் உள்ள மிகப்பெரிய சவால் வரி (Tax). குறிப்பாக, மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) மற்றும் மறுசீரமைப்பு செலவுகள் (Restructuring Costs) நிறுவனங்களுக்கு அதிக பண விரயத்தை ஏற்படுத்தும். மேலும், FEMA விதிகளுக்கு உட்பட்டு ESOP போன்ற விஷயங்களை நிர்வகிப்பது பெரிய சவால். ஸ்டார்ட்-அப்கள் பொதுப் பங்குகளை வெளியிடும்போது, இந்த வரிச் சுமைகளை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
