ரூபாயின் சரிவுக்கு என்ன காரணம்?
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக 94.82 என்ற அளவில் முடிவடைந்தது. இது அதன் வரலாறு காணாத குறைந்தபட்ச அளவை நெருங்கி வருகிறது. இந்த திடீர் வீழ்ச்சிக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன: ஒன்று, உலக சந்தையில் விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை, மற்றொன்று, தொடர்ச்சியாக வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள்.
$115-க்கு மேல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவுகள் (Import Costs) அதிகரித்து, பணவீக்கம் (Inflation) குறித்த கவலைகள் எகிறியுள்ளன. எரிபொருள், போக்குவரத்து, உற்பத்தி என அனைத்துக்கும் செலவு அதிகரிப்பதால், நாட்டின் பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்ஸ் (Balance of Payments) பாதிக்கப்பட்டு, இறக்குமதிக்காக அதிக டாலர்கள் தேவைப்படுவதால் ரூபாயின் மதிப்பு குறைகிறது.
மேலும், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) தொடர்ந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். இதனால் உள்நாட்டில் டாலர்களின் புழக்கம் குறைந்து, ரூபாய்க்கு மேலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமும், புவிசார் அரசியல் (Geopolitical) கவலைகளும் உலக முதலீட்டாளர்களை மேலும் எச்சரிக்கையாக இருக்க வைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, உலக விநியோகச் சங்கிலிகள் (Supply Chains) மற்றும் எரிசக்தி சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் (US Federal Reserve) அடுத்தகட்ட கொள்கை அறிவிப்புகளையும் சந்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. OPEC-லிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதும் எண்ணெய் சந்தையில் மேலும் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.
'ரூபாயின் போக்கு தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது. மீண்டு வர முயற்சிக்கும்போதெல்லாம் விற்பனை அழுத்தம் ஏற்படுகிறது. பெரிய அளவில் வாங்கும் ஆர்வம் எதுவும் இல்லை' என LKP Securities-ன் கமாடிட்டி மற்றும் கரன்சி ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் ஜடீன் திரிவேதி தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் 94.40 என்ற அளவில் முதல் ரெசிஸ்டன்ஸ் (Resistance) இருக்கும் என்றும், 95.25 அடுத்த முக்கிய சப்போர்ட்டாக (Support) இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கச்சா எண்ணெய் விலை மற்றும் பணப் புழக்கம் (Capital Flows) ஆகியவற்றைப் பொறுத்து ரூபாயின் ஏற்ற இறக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டாலர் இன்டெக்ஸ் (Dollar Index) சற்று உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி லாபத்தில் முடிந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தம் அதை ஈடு செய்யவில்லை. மார்ச் மாதத்திற்கான இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி (Industrial Production Growth) 4.1% ஆகக் குறைந்து, கடந்த ஐந்து மாதங்களில் இதுவே மிகக் குறைந்த அளவாக பதிவாகியுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
