இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு அக்டோபரில் **56.7** எனும் குறியீட்டை எட்டி, கடந்த 4 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேநேரம், லாபத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 9 மாதங்களில் முதல்முறையாக புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதை நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
HSBC வெளியிட்ட சமீபத்திய ஃபிளாஷ் காம்போசிட் பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் (PMI) தகவலின்படி, இந்தியாவின் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக அதிகரித்துள்ளது. செப்டம்பரில் 55.9 ஆக இருந்த இந்த குறியீடு, அக்டோபரில் 56.7 ஆக உயர்ந்துள்ளது. இது சந்தை எதிர்பார்த்ததை விட மிக அதிகம். குறிப்பாக, சர்வீஸ் செக்டார் 55.2-லிருந்து 56.2 ஆக உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தித் துறையில் மட்டும் 54.9 என சிறிய சரிவு காணப்பட்டது.
வேலைவாய்ப்பில் ஒரு அதிரடி மாற்றம்
கடந்த 9 மாதங்களாகத் தொடர்ந்து பணியாளர்களைச் சேர்த்து வந்த இந்திய நிறுவனங்கள், அக்டோபரில் புதிய வேலைவாய்ப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. ஏற்கனவே உள்ள பணியாளர்களைக் கொண்டே அதிக உற்பத்தித் திறனைப் பெற (Operational Efficiency) கம்பெனிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணிச்சுமை பாக்கி (Backlogs) மிகக் குறைந்துள்ளது, இது கம்பெனிகளின் லாப வரம்பை (Profit Margins) குறுகிய காலத்தில் உயர்த்த உதவும்.
பணவீக்கம் மற்றும் ஏற்றுமதி நிலவரம்
நிறுவனங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மூலப்பொருள் செலவுகள் கடந்த ஓராண்டிலேயே மிகக் குறைந்த நிலைக்கு வந்துள்ளன. அதேபோல், விற்பனை விலையை உயர்த்தும் வேகமும் குறைந்துள்ளது, இது கம்பெனிகளின் லாபத்தைப் பாதுகாக்கும். ஏற்றுமதியைப் பொறுத்தவரை, பொருட்கள் ஏற்றுமதி 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், சேவை சார்ந்த ஏற்றுமதியில் மந்தநிலை காணப்படுவது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு நிறுத்தம் தற்காலிகமானதா அல்லது கம்பெனிகள் எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறார்களா என்பதைப் பொறுத்துதான் சந்தையின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்.
