இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகத்தை எளிதாக்க STT வரியைக் குறைக்க வேண்டும் என Emkay Global பொருளாதார நிபுணர் மாதவி அரோரா வலியுறுத்தியுள்ளார். இது கேபிடல் கெய்ன்ஸ் வரியை மாற்றுவதை விட அதிக பலனைத் தரும் என்று அவர் கூறியுள்ளார்.
பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் சந்திக்கும் லாங்-டெர்ம் கேபிடல் கெய்ன்ஸ் (LTCG) வரி சிக்கல்களை விட, தற்போதுள்ள ட்ரான்சாக்ஷன் வரிகளைக் குறைப்பதே சந்தையின் லிக்விடிட்டியை (Liquidity) அதிகரிக்கச் சிறந்த வழி என்று Emkay Global சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது முதலீட்டாளர்கள் 12.5% வரையிலான கேபிடல் கெய்ன்ஸ் வரியுடன், பங்கு வாங்கும் மற்றும் விற்கும் ஒவ்வொரு முறையும் 0.1% அளவிற்கு STT வரியையும் செலுத்துகின்றனர். இந்த இரட்டை வரிச் சுமையைக் குறைப்பது வர்த்தகர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமையும்.
AI முதலீடுகளும் நிஃப்டி நிலவரமும்
உலக அளவில் AI மற்றும் டெக் நிறுவனங்களில் இருந்து முதலீடுகள் இந்தியாவிற்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்தியப் பங்குச்சந்தையான நிஃப்டியில் வங்கி மற்றும் நிதித்துறை பங்குகள் மட்டுமே சுமார் 36% பங்களிப்பைக் கொண்டுள்ளன. இதனால், உலகளவில் நடக்கும் செமிகண்டக்டர் மற்றும் AI சார்ந்த வளர்ச்சிகளின் நேரடிப் பயன் இந்தியாவிற்கு உடனே கிடைக்க வாய்ப்பு குறைவு. அந்நிய முதலீடுகள் நிலையாக இருக்க, கச்சா எண்ணெய் விலை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி மிக முக்கியம்.
கச்சா எண்ணெய்: நாட்டின் பொருளாதாரத்திற்கு சவால்
இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி இலக்கு தற்போதைக்குச் சாத்தியமாகத் தெரிந்தாலும், அது சர்வதேச கச்சா எண்ணெய் விலையைச் சார்ந்துதான் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் கச்சா எண்ணெய் இறக்குமதி 24% அதிகரித்துள்ளது. ஒருவேளை கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $110 டாலரைத் தாண்டினால், அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க, ரிசர்வ் வங்கியின் குறுகிய கால முடிவுகளை விட, எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறையில் நீண்டகாலக் கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம் என்பதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
