உலக அளவில் மிகச்சிறந்த வளர்ச்சி விகிதத்தை இந்தியா கொண்டிருந்தாலும், முதலீட்டுக்கான சிறந்த நாடுகளில் இந்தியா 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது. உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட தொடங்கியுள்ளன.
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் முன்னணி நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும்போது இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சுமார் 98% பொருளாதார நிபுணர்கள், இந்திய பொருளாதாரம் அடுத்த 12 மாதங்களில் வலுவான வளர்ச்சியைக் காணும் என்று கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டின் உள்நாட்டு நுகர்வு (Domestic Demand) சிறப்பாக இருப்பதுதான்.
முதலீட்டாளர்கள் ஏன் தயங்குகின்றனர்?
வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் (Multinational Corporations) இந்தியாவை முதலீட்டுத் தளமாகத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 56% நிறுவனங்கள் இந்தியாவை முன்னிலைப்படுத்திய நிலையில், தற்போது அது 40% ஆகக் குறைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணங்களாக நிபுணர்கள் கூறுவது:
- புவிசார் அரசியல் பதற்றம்: சுமார் 97% பொருளாதார நிபுணர்கள், சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் மோதல்களே பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதுகின்றனர்.
- உள்கட்டமைப்பு தடைகள்: செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் வளர்ச்சியை நோக்கி இந்தியா நகர்ந்தாலும், 79% நிபுணர்கள் இதற்கான அனுமதி மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் (Regulatory Hurdles) வளர்ச்சியை மெதுவாக்கலாம் என எச்சரிக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
தற்போதைய சூழலில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு (FDI) குறைய வாய்ப்புள்ளதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உள்நாட்டு நுகர்வு மற்றும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்கும் அளவுக்கு வலுவாக உள்ளதா என்பதை அடுத்தடுத்த குவார்ட்டர் ரிசல்ட்கள் உறுதிப்படுத்தும். தற்போதைய இந்த எச்சரிக்கை உணர்வு வெறும் தற்காலிகமானதா அல்லது நீண்டகால முதலீடுகளை பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பது அவசியம்.
