இந்தியாவில் வாழை சாகுபடியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் பனானா பிளாண்டேஷன் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வாழை உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தில் இருந்தாலும், ஏற்றுமதியில் இந்தியா இன்னும் பின்தங்கியே உள்ளது. தற்போது, இந்திய ஏற்றுமதியின் மதிப்பு $377.5 மில்லியன் ஆக உள்ளது. இதை $1 பில்லியன் என்ற இலக்கை நோக்கி உயர்த்த, வாழைத் தோட்டங்களில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) கொண்டு வர மத்திய வர்த்தக அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
ஏன் இந்த முதலீடு தேவை?
தற்போது தேயிலை, காபி மற்றும் ரப்பர் போன்ற பயிர்களுக்கு 100% FDI அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் வாழைக்கும் அனுமதி அளிப்பதன் மூலம், சர்வதேச சந்தைக்குத் தேவையான தரமான கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று அரசு கருதுகிறது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் கடுமையான தரக்கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்ய அதிநவீன குளிர்சாதன கிடங்குகள் (Cold Storage) மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் அவசியம்.
சவால்கள் என்னென்ன?
இந்தியாவில் வாழைச் சாகுபடி பெரும்பாலும் சிறு விவசாயிகள் கையில்தான் உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் இன்னும் பெரிய சவாலாகவே உள்ளன. முதலீடு வருவதால் மட்டும் உடனடி மாற்றம் வராது; இந்த அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் புதிய பாலிசி அமையுமா என்பதைத்தான் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
எந்தெந்த மாநிலங்கள் பயனடையும்?
ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 67% பங்களிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பம் இந்த மாநிலங்களில் புகுத்தப்படும்போது, அது கோல்ட் செயின் மற்றும் ஃபுட் ப்ராசஸிங் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பாக அமையும்.
