இந்தியாவில் இ-காமர்ஸ் ஏற்றுமதியை ஊக்குவிக்க, அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்த சலுகை ஏற்றுமதிக்கு மட்டுமே, உள்நாட்டு விற்பனைக்கு பொருந்தாது.
இந்திய அரசு ஏற்றுமதி வர்த்தகத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. DGFT அறிவிப்பு எண் 27/2026-27-ன் படி, இனி இ-காமர்ஸ் தளங்கள் ஏற்றுமதி நோக்கத்திற்காக மட்டும் 100% அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று இன்வெண்டரி (Inventory) வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறு நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்பு
இதுவரை நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியாமல் சிரமப்பட்ட MSME நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய மைல்கல். இனி வெளிநாட்டு முதலீடு பெற்ற தளங்கள், 'Exporter-on-Record' (EOR) என்ற அந்தஸ்தைப் பெற்று, கஸ்டம்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். இதனால் சிறிய உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும்.
எங்கு கவனம் தேவை?
அரசு 'E-Commerce Export Hubs' என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளது. இது வேர்ஹவுசிங் மற்றும் டிஜிட்டல் கிளியரன்ஸ் பணிகளை வேகப்படுத்தும். அதே சமயம், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அனுமதி ஏற்றுமதிக்கு மட்டுமே. உள்நாட்டு விற்பனையில் பழைய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
சந்தையில் கிளம்பியுள்ள அச்சம்
Confederation of All India Traders (CAIT) போன்ற அமைப்புகள், இந்த பொருட்களை உள்நாட்டு சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வாய்ப்புள்ளதா (Leakage) என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன. எனவே, வெளிநாட்டிற்கு செல்லும் பொருட்கள் முறையாக செல்கிறதா என்பதை கண்காணிக்க மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
