அரியானா மாநில அரசு சுமார் 13,000 துப்புரவுப் பணியாளர்களின் வேலைக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. 60 வயது வரை வேலை என்பதுடன், சம்பள உயர்வு மற்றும் கூடுதல் நலத்திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது.
அரியானா அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள Haryana Contractual Employees (Security of Service) Act of 2024-ன் கீழ், இனி துப்புரவுப் பணியாளர்கள் தங்களின் 60 வயது வரை எவ்வித அச்சமும் இன்றி பணியில் தொடரலாம். இந்த புதிய சட்டம் அவர்களுக்கு நீண்டகால வேலை பாதுகாப்பை வழங்குகிறது.
ஊதிய விவரங்கள்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தகுதியுடைய பணியாளர்களுக்கு, மாதாந்திர ஊதியமாக ₹25,560 வழங்கப்படும். இதில் அடிப்படை சம்பளம் ₹21,970 மற்றும் இதர அலவன்ஸ்கள் அடங்கும். இதுதவிர, பணியின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு மாதம் ₹2,000 கூடுதல் ரிஸ்க் அலவன்ஸாகவும் வழங்கப்பட உள்ளது.
மேலும், இவர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance), பணிக்கொடை (Gratuity), மகப்பேறு விடுப்பு மற்றும் Haryana Kaushal Rozgar Nigam Limited மூலம் நிதி உதவிகள் என பல்வேறு நலத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வேலைநிறுத்தமும் அரசு எச்சரிக்கையும்
கடந்த ஆகஸ்ட் 6, 2026 முதல் மாநிலம் முழுவதும் துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகர்ப்புறங்களில் குப்பைகள் தேங்கி பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இத்தகைய சலுகைகளை அறிவித்தாலும், இன்னும் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.
இந்த சூழலில், செப்டம்பர் 5, 2026-க்குள் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு கெடு விதித்துள்ளது. தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம் என அரசு எச்சரித்துள்ளது. இந்த புதிய அறிவிப்புகள் நகரின் தூய்மைப் பணிகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருமா என்பதை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
