8வது சம்பள கமிஷன் அறிவிப்பு குறித்த மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
தேசிய கவுன்சில் (Joint Consultative Machinery – NC-JCM) அமைப்பின் கீழ் செயல்படும் ஊழியர் நலச்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் Rs 69,000 சம்பளம் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளன.
இந்த Rs 69,000 சம்பளம், தற்போதைய காலக்கட்டத்தில் அத்தியாவசியமான உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் தேவைகள் போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு 'லிவிங் வேஜ்' (Living Wage) ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இப்போதைய 3 பேர் கொண்ட குடும்ப கணக்கீட்டு முறைக்கு பதிலாக, ஊழியர், அவரது துணை, இரண்டு குழந்தைகள் மற்றும் சார்ந்து வாழும் பெற்றோர்கள் என மொத்தம் 5 பேர் கொண்ட குடும்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சமூக மற்றும் சட்ட சூழலுக்கு இதுவே பொருத்தமானது என அவர்கள் கருதுகின்றனர்.
சம்பள உயர்வுக்கான கோரிக்கையில், ஊட்டச்சத்து தேவைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு சராசரியாக 3,490 கலோரிகள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய சம்பள கமிஷன்களால் கணக்கிடப்பட்ட 2,700 கலோரி அளவை விட இது கணிசமான அதிகரிப்பு ஆகும். குறிப்பாக, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இது அவசியமானது.
இந்த சம்பள உயர்வு, அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளைத் திறம்படவும், கண்ணியத்துடனும் செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பள மாற்றங்களை செயல்படுத்த, ஊழியர் தரப்பு 3.83 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரை (Fitment Factor) பரிந்துரைத்துள்ளது. இது, 7வது சம்பள கமிஷனின் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரை விட மிக அதிகம். இதன் மூலம், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் கணிசமாக உயரும்.
சம்பளம் உயர்வால் ஏற்படும் செலவினங்கள் குறித்த கவலைகளைப் போக்கும் வகையில், சம்பளம் தொடர்பான செலவுகள் மத்திய அரசின் மொத்த வருவாய் செலவினங்களில் சுமார் 13% மட்டுமே என்றும், இந்த சம்பள உயர்வு நுகர்வை அதிகரித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தி, வரி வசூலை உயர்த்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஒரு செலவாக பார்க்காமல், மனிதவளத்தில் செய்யப்படும் முதலீடாக கருத வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர்.
