நில நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்த மத்திய அரசு DILRMP 3.0 திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக **₹565.5 கோடி** நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி நிலங்களுக்கு என தனித்துவமான அடையாள எண் (Unique ID) வழங்கப்படும்.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், நில மேலாண்மையை நவீனமயமாக்க DILRMP 3.0 திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 2031-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்காக ₹565.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய முறையில் இயங்கி வந்த நில நிர்வாகத்தை, GIS தொழில்நுட்பம் மூலம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
நேஷனல் லேண்ட் ஸ்டாக் (National Land Stack)
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் 'Bhu-Aadhaar'. இது நிலங்களுக்கான 14 இலக்க தனித்துவமான அடையாள எண் (ULPIN) ஆகும். இதன் மூலம் நிலத்தின் எல்லைகள் மற்றும் உரிமையாளர் குறித்த தகவல்கள் குழப்பமின்றி ஒரே இடத்தில் கிடைக்கும். மேலும், பாஸ்போர்ட் அலுவலகங்களைப் போலவே செயல்படும் 75 நவீன 'Registration Seva Kendras' அமைக்கப்படவுள்ளன, இது பத்திரப் பதிவு பணிகளை எளிதாக்கும்.
பொருளாதார தாக்கம்
ரியல் எஸ்டேட் மற்றும் வங்கித் துறையினருக்கு இது பெரிய சாதகம். நில உரிமையாளர் யார் என்பதில் தெளிவு கிடைப்பதால், வங்கிகள் அடமானக் கடன்களை (Mortgage) எளிதாக வழங்க முடியும். கட்டுமான நிறுவனங்கள் நிலங்களை சரிபார்க்கும் கால அவகாசம் குறைவதால், புராஜெக்ட் பணிகள் வேகமெடுக்கும்.
சவால்கள் என்ன?
நிலம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ள விஷயம் என்பதால், ஒவ்வொரு மாநிலமும் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொள்கிறது என்பதே வெற்றியைத் தீர்மானிக்கும். மேலும், பல தசாப்தங்களாகக் கையெழுத்துப் பிரதிகளாக இருக்கும் பழைய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். எனவே, இந்தத் திட்டத்தின் மாநில வாரியான செயல்பாட்டை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.
