உலகம் முழுவதும் மென்மேலும் செல்வந்தர்கள் பெருகி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக, தினசரி சராசரியாக 89 பேர், அதாவது 30 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பை தாண்டி, UHNWI (Ultra-High-Net-Worth Individuals) பட்டியலில் இணைகின்றனர். பணவீக்கம், புவிசார் அரசியல் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சி தொடர்கிறது.
அமெரிக்கா முதலிடம், சீனா மெதுவாக...
இந்த செல்வப் பெருக்கத்திற்கு அமெரிக்காதான் முக்கிய காரணம். கடந்த 5 ஆண்டுகளில் உருவான புதிய UHNWIs-ல் 41% அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அந்நாட்டின் பெரிய கேப்பிடல் மார்க்கெட்கள் மற்றும் டெக்னாலஜி பொருளாதாரம் இதற்கு துணைபுரிகின்றன. 2031-ம் ஆண்டிற்குள் உலக UHNWIs-ல் 41% அமெரிக்காவில் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், சீனா தொடர்ந்து செல்வத்தை உருவாக்கிய போதிலும், அதன் பங்கு மெதுவாக குறைந்து வருகிறது.
இந்தியாவின் அதிரடி வளர்ச்சி!
ஆனால், இந்தியாவின் வளர்ச்சி தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவின் UHNWI மக்கள் தொகை 60% க்கும் மேல் வளர்ந்துள்ளது. தற்போது சுமார் 20,000 பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர். 2031-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 25,000 ஐ தாண்டும் என்றும், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் செல்வந்தர் சந்தைகளில் ஒன்றாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்?
வெறும் சொத்து மதிப்பு அதிகரிப்பதால் மட்டும் இந்த வளர்ச்சி வரவில்லை. ஃபைனான்சியல்மயமாக்கல் (Financialization), வலுவான டெக்னாலஜி தொழில்முனைவு (Technology Entrepreneurship), மற்றும் பிரைவேட் கேபிடல் (Private Capital) போன்றவற்றின் வளர்ச்சி ஆகியவை முக்கிய காரணிகளாகும். இவையெல்லாம், ஒட்டுமொத்த GDP வளர்ச்சியை விட அதிகமாக செல்வத்தை ஈட்ட உதவுகின்றன.
உலக செல்வம் மாறி வருகிறது...
இந்த செல்வந்தர்களின் பெருக்கம், ரியல் எஸ்டேட் மற்றும் சொகுசு சொத்துக்களின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. அதேசமயம், வளர்ந்த நாடுகளில் பணக்காரர்களுக்கான வரி உயர்வு போன்ற காரணங்களால், செல்வந்தர்கள் மத்தியில் இடம் பெயர்வு அதிகமாகியுள்ளது. இது நாடுகளுக்கு இடையேயான மூலதனப் பாய்ச்சலை (Capital Flows) அதிகரிக்கிறது. மேலும், இந்தோனேஷியா, சவுதி அரேபியா, போலந்து போன்ற நாடுகளும் புதிய செல்வந்தர் மையங்களாக உருவாகி வருகின்றன.
