சர்வதேச அளவில் கிரிப்டோ பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த FATF அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக 2027 முதல் கிரிப்டோ நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
பாரிஸில் நடைபெற்ற FATF கூட்டத்தில், கிரிப்டோ கரன்சிகள் மூலம் நடக்கும் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி பரிமாற்றங்களை தடுக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிரிப்டோ சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க 2027-ம் ஆண்டிலிருந்து புதிய ஆய்வு முறைகளை (Targeted Reviews) அமல்படுத்த FATF திட்டமிட்டுள்ளது.
மோசடிகளுக்கு எதிரான போர்
கிரிப்டோ மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் செயல்படும் மோசடி கும்பல்களின் நிதி பரிமாற்றத்தை துண்டிக்கவும் FATF வலியுறுத்தியுள்ளது. குற்றவாளிகள் எளிதாக பணத்தை கடத்துவதைத் தடுக்க, உறுப்பினர் நாடுகள் மென்மையான போக்கை கைவிட்டு, நிதி ஓட்டங்களை முடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு பட்டியலில் மாற்றம்
இந்த கூட்டத்தில் பல நாடுகள் மீதான கண்காணிப்பு தளர்த்தப்பட்டுள்ளது. பல்கேரியா, மொனாக்கோ, ஐவரி கோஸ்ட் மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால், வியட்நாம் போதிய முன்னேற்றம் காட்டாததால் தொடர்ந்து நெருக்கடியில் உள்ளது. மேலும், மியான்மர் மற்றும் ஈரான் மீதான நடவடிக்கைகள் தொடர்கின்றன, ரஷ்யாவின் உறுப்பினர் தகுதி இன்னும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
இந்தியா FATF-ன் முக்கிய உறுப்பினராக இருப்பதால், ஏற்கனவே கிரிப்டோ நிறுவனங்களை PMLA (Prevention of Money Laundering Act) சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. வரும் நாட்களில் கிரிப்டோ மற்றும் பின்டெக் துறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் ரிப்போர்ட்டிங் விதிகள் இன்னும் கடுமையாக்கப்படலாம். எனவே, முதலீட்டாளர்கள் இனி வரும் காலங்களில் சட்ட ரீதியான கெடுபிடிகள் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
