வரி வசூல் நடவடிக்கைகளில் தனிநபர்களைக் கைது செய்யும் விதியை CBDT அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், வேல்யுவர்கள் மற்றும் வருமான வரி பயிற்சியாளர்களுக்கான பதிவு காலக்கெடுவை மார்ச் 31, 2027 வரை நீட்டித்துள்ளது.
வருமான வரித் துறையின் வரி வசூல் நடைமுறைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT). வரி பாக்கி வசூலுக்காக தனிநபர்களைக் கைது செய்யும் மற்றும் சிறையில் அடைக்கும் விதியை அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த மாற்றம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. Finance Act 2026-ன் விதிகளுக்கு ஏற்ப இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இனி என்ன நடக்கும்?
கைது செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டாலும், வரி வசூலில் அரசு சமரசம் செய்து கொள்ளவில்லை. சொத்துக்களை முடக்குதல் (Property Attachment) மற்றும் சொத்துக்களை ஏலமிடுதல் போன்ற நிதி சார்ந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் வழக்கம்போல தொடரும். இது வரி தொடர்பான சட்ட சிக்கல்களில் தனிநபர் சுதந்திரத்திற்குப் பதிலாக, சொத்துக்களைக் குறிவைக்கும் அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது.
வேல்யுவர் (Valuer) பதிவுக்கு கூடுதல் அவகாசம்
நிபுணர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், வேல்யுவர்கள் மற்றும் வருமான வரி பயிற்சியாளர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30, 2026-ல் இருந்து மார்ச் 31, 2027 வரை CBDT நீட்டித்துள்ளது.
இதற்காக மேம்படுத்தப்பட்ட Form 169 மற்றும் Form 171 படிவங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விண்ணப்பதாரர்கள் ₹10,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 11 வகையான சொத்துக்களுக்கு (பங்குகள், நகை, இயந்திரங்கள் போன்றவை) மதிப்பீடு செய்பவர்கள் இந்த பதிவை மேற்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் நடைமுறை எளிமை
நிர்வாக ரீதியாக, இனி டிஜிட்டல் கையொப்பம் (Digital Signature) கட்டாயம் இல்லை. மின்னணு தகவல் பரிமாற்றம் (Electronic communication) போதுமானது என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது வரி நோட்டீஸ்கள் மற்றும் தகவல்களை அனுப்பும் முறையை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
