BRICS நாடுகள் 'Global Value Chains Action Plan 2026-2030' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. கிரிட்டிக்கல் மினரல்ஸை அந்தந்த நாடுகளிலேயே பதப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில், 'நியூ டெல்லி பிரகடனம்' (New Delhi Declaration) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது கிரிட்டிக்கல் மினரல்ஸ் விநியோகச் சங்கிலியில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மூலப்பொருட்களை அப்படியே ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, அவைகளை அந்தந்த நாடுகளிலேயே மதிப்பு கூட்டி (Value Addition) பதப்படுத்துவதே இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம்.
2026-2030 ஆக்ஷன் பிளான்
இந்தத் திட்டமானது 11 உறுப்பு நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கியது. கிரீன் எனர்ஜி, செமி கண்டக்டர்கள் மற்றும் மேம்பட்ட பேட்டரி சேமிப்பு தொழில்நுட்பங்களுக்குத் தேவையான கனிமங்களை உள்நாட்டிலேயே பதப்படுத்த இது உதவும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த கொள்கை மாற்றம் சுரங்கம், மெட்டீரியல்ஸ் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இதுவரை இந்திய நிறுவனங்கள் கிரிட்டிக்கல் மூலப்பொருட்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்து இருந்தன. இப்போது உள்நாட்டிலேயே சுத்திகரிப்பு ஆலைகள் அமைப்பதன் மூலம், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் குறையும் மற்றும் உற்பத்திச் செலவும் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.
மேலும், அமெரிக்க டாலரைச் சாராமல், உள்ளூர் கரன்சிகளிலேயே வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்த மாநாடு ஆராய்ந்துள்ளது. இது அந்நிய செலாவணி ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் ரிஸ்க்கைக் குறைக்க உதவும்.
சவால்கள் என்ன?
இது ஒரு நீண்டகால உத்தி என்பதால், உடனடி மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. 11 நாடுகளின் வெவ்வேறு பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைப்பது மற்றும் ஒவ்வொரு நாடும் தங்கள் உள்ளூர் விதிகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது சவாலான காரியம். வரும் காலங்களில் ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட பாலிசி வரைபடங்கள் (Policy Roadmaps) வெளியாகும் போது, இந்தத் துறையின் வளர்ச்சி வேகம் குறித்து தெளிவான படம் கிடைக்கும்.
