ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் உள்ள 123 நகராட்சிகளில் ரூ.11,360 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. முதன்முறையாக இந்த மாநிலம் 'Hybrid Annuity Model' (HAM) முறையை கையில் எடுத்துள்ளது.
ஆந்திர அரசு மாநிலத்தின் 26 மாவட்டங்களில் உள்ள 123 நகராட்சிகளை மேம்படுத்த ரூ.11,360 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை வசதிகள் முதல் பொது பூங்காக்கள் வரை பல்வேறு வசதிகளை நவீனமயமாக்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
முதலீட்டு விவரங்கள்
இந்தத் தொகையில், ரூ.7,469 கோடி மாநிலம் முழுவதற்கும் பொதுவான திட்டங்களுக்கும், ரூ.3,890 கோடி கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சி (GVMC) மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சாலை கட்டுமானத்திற்கு மட்டும் ரூ.4,656 கோடியும், பூங்காக்களுக்கு ரூ.509 கோடியும், தெரு விளக்குகளுக்கு ரூ.247 கோடியும் செலவிடப்பட உள்ளது.
ஏன் இந்த 'Hybrid Annuity Model' (HAM)?
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமே HAM முறைதான். இதுவரை தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த முறையை, முதன்முறையாக நகராட்சித் திட்டங்களுக்கு ஆந்திர அரசு கொண்டு வந்துள்ளது. இதில், கட்டுமான காலத்தின் போது 40% தொகையை அரசு வழங்கும், மீதமுள்ள 60% திட்டம் முடிந்த பிறகு தவணை முறையில் வழங்கப்படும். இது தனியார் நிறுவனங்களுக்கு உடனடி நிதிச்சுமையைக் குறைத்து, டெண்டர்களில் அதிக நிறுவனங்கள் பங்கேற்க ஊக்கமளிக்கும்.
முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு
கட்டுமான மற்றும் சிவில் இன்ஜினியரிங் நிறுவனங்களுக்கு இது பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. டெண்டர் வெளியீடு மற்றும் ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஆகியவற்றைப் பொறுத்துதான் இதன் வேகம் அமையும். குப்பம் ரயில் சேவை விரிவாக்கம் போன்ற திட்டங்களுடன் இணைந்து, ஒட்டுமொத்த உட்கட்டமைப்புத் துறைக்கும் இந்தத் திட்டம் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
