CII Business Summit-ல் பேசிய அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும், தேசிய வலிமைக்கும் இரண்டு விஷயங்கள் இன்றியமையாதவை என்று கூறியுள்ளார். அவைதான் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவு.
"ஒரு நாடு அதன் ஆற்றலை கட்டுப்படுத்தினால், அதன் தொழில்துறை எதிர்காலத்தை அதுவே வழிநடத்தும். அதேபோல், கணினி சக்தியை (Compute Power) கட்டுப்படுத்தும் நாடு, நுண்ணறிவு எதிர்காலத்தை ஆளும்" என்று அவர் குறிப்பிட்டார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் (Supply Chains) தேசிய நலன்களின் அடிப்படையில் மாறி வருவதால், வர்த்தகப் பாதைகள் திறந்ததாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் நாடுகளும் ஆற்றல் மற்றும் மேம்பட்ட கணினித் துறைகளில் தங்களது சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் தீவிரமாக உள்ளதை அதானி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சீனா வெளிநாட்டு செமிகண்டக்டர் விநியோகத்தை சார்ந்திராமல், AI துறையில் முதலிடம் பிடிக்க முனைப்பு காட்டுவது இதற்கு ஓர் உதாரணம்.
எனவே, இந்தியாவும் தனது சொந்த ஆற்றல் வளங்களை பெருக்குவது, உள்நாட்டு கணினி மற்றும் AI திறன்களை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதன் மூலமே, இந்தியா தனது தொழில்துறை மற்றும் நுண்ணறிவு எதிர்காலத்தை உலக அரங்கில் திறம்பட வடிவமைக்க முடியும் என அதானி கேட்டுக் கொண்டார்.
