இந்திய நிதி நுண்ணறிவு பிரிவு (FIU-IND), பணமோசடி தடுப்பு சட்டத்தை (PMLA) முறையாக பின்பற்றாத 15 வெளிநாட்டு கிரிப்டோ தளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் நிதி நுண்ணறிவு பிரிவு (FIU-IND), கிரிப்டோ சந்தையில் ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது. முறையான பதிவு மற்றும் பணமோசடி தடுப்பு சட்ட விதிமுறைகளை (PMLA) பின்பற்றாத 15 வெளிநாட்டு கிரிப்டோ தளங்களின் இணையதளங்கள் மற்றும் செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதனால் இந்த நடவடிக்கை?
கடந்த மார்ச் 2023 முதல், இந்திய பயனர்களுக்கு சேவை வழங்கும் எந்தவொரு விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்து (VDA) நிறுவனமும் FIU-IND அமைப்பில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி செயல்பட்டதால், இந்தியாவுக்கு வெளியே இயங்கும் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்திய சட்டப்படி, இந்திய வாடிக்கையாளர்களை குறிவைக்கும் எந்தவொரு நிறுவனமும் உள்ளூர் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டியது கட்டாயம்.
பட்டியலில் உள்ள தளங்கள்
முடக்கப்பட்டுள்ள முக்கிய தளங்களில் Weex, Blofin, Bitunix, DigiFinex, XT.com, Latoken, WOO X, Pionex, ChangeNow, SimpleSwap, Fixedfloat, WhiteBIT மற்றும் Guardarian உள்ளிட்டவை அடங்கும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு: ரிஸ்க் என்ன?
- பணத்தை எடுப்பதில் சிக்கல்: இந்த தளங்கள் முடக்கப்பட்டால், உங்கள் டிஜிட்டல் வாலட்டில் உள்ள சொத்துக்களை அணுகுவதில் சிரமம் ஏற்படலாம். சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் குறைகளுக்கான தீர்வு இங்கு கிடைக்காது.
- வரி சிக்கல்கள்: இந்திய அரசு கிரிப்டோ லாபத்திற்கு 30% வரி விதிக்கிறது. இந்த தளங்களில் இருந்து சொத்துக்களை மாற்றுவது அல்லது பரிவர்த்தனை விவரங்களை பராமரிப்பது, வருமான வரி தாக்கல் செய்யும் போது பெரும் சிக்கலாக மாறலாம்.
தற்போது இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட கிரிப்டோ நிறுவனங்கள் மட்டுமே முறையாக பதிவு செய்து செயல்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் கிரிப்டோ வாலட்டுகளை சரிபார்த்து, முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது நல்லது.
