ஹைதராபாத்தில் உள்ள Swiggy Instamart, Flipkart மற்றும் Zepto நிறுவனங்களின் 4 'டார்க் ஸ்டோர்'களின் லைசென்ஸை தெலுங்கானா உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தெலுங்கானா உணவு பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (TG SAFE), ஹைதராபாத்தில் உள்ள முன்னணி குயிக் காமர்ஸ் நிறுவனங்களின் கிடங்குகளில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 30, 2026 அன்று நடத்தப்பட்ட ஆய்வில், சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக 4 முக்கிய ஸ்டோர்களின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ஆய்வில் கண்டறியப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள்
ஆய்வின் போது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி இந்த கிடங்குகள் பராமரிக்கப்படவில்லை என்பது உறுதியானது. கிடங்குகளில் கரப்பான் பூச்சிகள், சுவர்களுக்குள் பூச்சிகள், அழுகிய காய்கறிகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், குளிர்சாதனப் பெட்டிகள் துருப்பிடித்தும், அசுத்தமாகவும் இருந்தது தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்களை அசுத்தமான பொருட்களுடன் சேர்த்து வைத்திருந்தது குறுக்கு-மாசுபாட்டிற்கு (cross-contamination) வழிவகுக்கும் என்பதால் அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்களுக்கு உள்ள சவால்கள்
இந்த 4 ஸ்டோர்கள் தவிர, மேலும் 5 கிளைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 3 இடங்களுக்கு மேம்பாட்டுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உணவு மாதிரிகள் 15 சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு: குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் நிமிடங்களில் டெலிவரி செய்வதில் காட்டும் வேகத்தை, இனி கிடங்குகளின் பராமரிப்பிலும் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளை (Operating Costs) அதிகரிக்கலாம். இது எதிர்காலத்தில் அவர்களின் லாபத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், நிறுவனங்கள் தரக் கட்டுப்பாட்டுப் பணிகளில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
