உலகப்புகழ் பெற்ற ஆக்டிவேர் பிராண்டான Fabletics, Reliance Brands Limited-உடன் இணைந்து தனது முதல் ஸ்டோரை டெல்லியில் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் ஃபிட்டிங் ரூம் போன்ற நவீன வசதிகளுடன் களமிறங்கியுள்ள இந்த பிராண்ட், விரைவில் மும்பையிலும் தனது கிளைகளை விரிவுபடுத்த உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஃபிட்னஸ் மற்றும் ஆக்டிவேர் பிராண்டான Fabletics, இப்போது அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தைக்குள் நுழைந்துள்ளது. புதுடெல்லியின் DLF Promenade-ல் தனது முதல் பிரத்யேக விற்பனையகத்தை இந்நிறுவனம் திறந்துள்ள நிலையில், இது ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸின் அங்கமான Reliance Brands Limited-உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய கூட்டணியாகும்.
டெக்னாலஜி கலந்த ஷாப்பிங் அனுபவம்
இந்த ஷோரூம் மற்ற கடைகளிலிருந்து தனித்து தெரிவதற்காக, நிறுவனம் டெக்னாலஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குறிப்பாக, RFID தொழில்நுட்பத்துடன் கூடிய 'ஸ்மார்ட் ஃபிட்டிங் ரூம்' வசதி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சைஸ் அல்லது மாடல்களை மாற்றிக்கொள்ள, அறையை விட்டு வெளியே வரத் தேவையில்லை. இது தவிர, ஃபிட்னஸ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்டராக்டிவ் ஜோன்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சந்தை நிலவரம் மற்றும் போட்டிகள்
தற்போது இந்தியா முழுவதும் 1,697 ரீடெய்ல் மையங்களை வைத்துள்ள ரிலையன்ஸ், Fabletics மூலம் பிரீமியம் அத்லீஷர் சந்தையை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் Nike, Adidas, Puma மற்றும் Decathlon போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டிசைன் மற்றும் ஹை-பெர்பார்மன்ஸ் ஆடைகள் மூலம் Fabletics அவர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பு.
அடுத்த கட்ட வளர்ச்சி
டெல்லியைத் தொடர்ந்து மும்பையிலும் ஸ்டோர்களைத் திறக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் உள்ள கடும் போட்டிகளுக்கு மத்தியில், இந்த பிராண்ட் எவ்வளவு விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமடைகிறது மற்றும் பிரீமியம் விலை நிர்ணயத்தை எப்படிச் சமாளிக்கிறது என்பதே இதன் எதிர்கால வெற்றிக்கு முக்கியமாக இருக்கும்.
