இந்திய ரீடெய்ல் துறையில் ஏப்ரல் மாதத்தில் விற்பனை அபார வளர்ச்சி கண்டுள்ளது. ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (RAI) அறிக்கையின்படி, கடந்த ஆண்டை விட 7% விற்பனை அதிகரித்துள்ளது. இது பல்வேறு பொருட்கள் மற்றும் பகுதிகளில் நுகர்வோர் தேவையின் நிலையான வளர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகள் லாப வரம்புகளை (Profit Margins) பாதிக்கும் என இந்தத் துறை எச்சரித்துள்ளது.
நுகர்வோர் தேர்வு மற்றும் செயல்திறன்
தற்போது நுகர்வோர் செலவு செய்வதில் கவனமாக இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. லாபத்தைப் பாதுகாக்க, சில்லறை விற்பனையாளர்கள் கையிருப்பை சரியாகத் திட்டமிடுதல், குறைந்த விலைக்கேற்ற பொருட்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் போன்ற உத்திகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மண்டல வாரியான வளர்ச்சி
வளர்ச்சியில் மேற்கு இந்தியா 9% வளர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. தென்னிந்தியா 8% வளர்ச்சியையும், வடக்கு மற்றும் பான்-இந்தியா 7% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. கிழக்கு இந்தியா 5% வளர்ச்சியுடன் சற்று மிதமாக உள்ளது.
பிரிவு வாரியான வளர்ச்சி
நுகர்வோர் சாதனங்கள் (Consumer Durables) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 11% வளர்ச்சி கண்டுள்ளது. உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை 9% அதிகரித்துள்ளது. ஆடை மற்றும் துரித உணவு (QSR) பிரிவுகளில் தலா 8% வளர்ச்சி பதிவாகியுள்ளது. காலணி பிரிவில் 7% வளர்ச்சி உள்ளது. விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அழகு, ஆரோக்கியப் பிரிவுகளில் சுமார் 5% வளர்ச்சி காணப்படுகிறது. மரச்சாமான்கள் (Furniture) பிரிவில் ஏப்ரல் 2026 இல் 4% என்ற மிகக் குறைந்த வளர்ச்சியே பதிவாகியுள்ளது.
