கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை காரணமாக மந்தமாக இருந்த ஐஸ் க்ரீம் சந்தை, இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் இந்த காலாண்டில் 30% முதல் 40% வரை விற்பனை வளர்ச்சி கண்டுள்ளன.
புதுப்புது சுவைகளில் கவனம்
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துவதால், ஐஸ் க்ரீம் ஒரு அத்தியாவசியமான 'கூலிங்' தேவையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, மாம்பழம், இளநீர், மற்றும் பழ வகைகளிலான ஐஸ் க்ரீம்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இளைஞர்கள் எளிமையான, நீர்ச்சத்து நிறைந்த வகைகளை விரும்புகின்றனர். கிராமப்புறங்களில் குச்சிகள் (Sticks) மற்றும் கப்களில் (Cups) வரும் குறைந்த விலை ஐஸ் க்ரீம்கள் வேகமாக விற்றுத் தீர்கின்றன. அதே சமயம், நகர்ப்புறங்களில் பிரீமியம் வகைகள், ஃபேமிலி பேக்குகள் மற்றும் பழ வகைகளை அதிகம் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக, க்விக் காமர்ஸ் (Quick Commerce) செயலிகள் மூலம் ஐஸ் க்ரீம் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
உற்பத்தித் திறனில் நெருக்கடி
ஆனால், திடீரென உச்சத்தை எட்டியுள்ள இந்த தேவையை சமாளிக்க ஐஸ் க்ரீம் தயாரிப்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை சீராக இல்லாததால், பல நிறுவனங்கள் உற்பத்தி திறனை (Production Capacity) அதிகரிக்க முதலீடுகளை தாமதப்படுத்தின. தற்போது, பெரும்பாலான உற்பத்தி ஆலைகள் 100% திறனில் இயங்குகின்றன. மேலும், உலகளாவிய பிரச்சனைகள், எரிபொருள் மற்றும் மூலப்பொருட்கள் கிடைப்பதில் உள்ள தடங்கல்கள், குறிப்பாக எல்பிஜி (LPG), டீசல் போன்ற பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை சரக்கு போக்குவரத்து மற்றும் உற்பத்தி திறனைப் பாதிக்கின்றன.
'ஸ்டாக் அவுட்' நிலையும், க்விக் காமர்ஸின் வெற்றியும்
இந்த அதீத தேவை காரணமாக, பெரும்பாலான கடைகளில் ஐஸ் க்ரீம் 'ஸ்டாக் அவுட்' (Stock-out) எனப்படும் கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் கொண்டு வரும் இருப்புக்கள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுவதாக தெரிவிக்கின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில், 'வாங்கக்கூடிய விலையில் கிடைத்தால் உடனே வாங்கிவிடலாம்' என்ற மனநிலை மக்களிடம் காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் சந்தையை விரிவுபடுத்துவதிலும், விற்பனையை வேகப்படுத்துவதிலும் க்விக் காமர்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரே நேரத்தில் சந்தையை விரிவுபடுத்தினாலும், குளிர்பதன சேமிப்பு (Cold Chain) மற்றும் விநியோக அமைப்புகளுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.