ஆன்லைன் உணவு தளங்களில் நடக்கும் பாதுகாப்பு விதிமீறல்களைக் கண்காணிக்க, FSSAI புதிதாக AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது குயிக் காமர்ஸ் மற்றும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை உயர்த்தக்கூடும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), டிஜிட்டல் முறையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து, ஆன்லைன் தளங்களில் பதிவிடப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் விளம்பரங்களை ஆய்வு செய்ய ஒரு புதிய AI மென்பொருளை FSSAI உருவாக்கி வருகிறது.
நேரடி கண்காணிப்பு இனி டிஜிட்டலில்
இதுவரை நேரடி ஆய்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த FSSAI, இனி AI மூலம் தகவல்களைத் திரட்டப்போகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் லேபிள்கள், அதில் உள்ள பொருட்கள் (Ingredients) மற்றும் விளம்பரங்களில் சொல்லப்படும் தகவல்கள் ஆகியவற்றில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், இந்த AI மென்பொருள் உடனே அதை கண்டறிந்துவிடும்.
நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?
இந்த புதிய கட்டுப்பாடு, குறிப்பாக Dark Stores மற்றும் Cloud Kitchen நடத்தும் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் தளங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு அந்த நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என FSSAI திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் தங்களது விற்பனையாளர்களைச் சரிபார்க்கவும், தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்யவும் கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
எந்தெந்த உணவுகள் ரேடாரில்?
பால் பொருட்கள், இறைச்சி, கோழி இறைச்சி, மசாலாப் பொருட்கள் மற்றும் தேன் போன்ற பொருட்கள் அதிக ரிஸ்க் உள்ள பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றின் குளிர்சாதன வசதி (Cold Chain) மற்றும் சுகாதாரத் தரங்களை ஆய்வு செய்ய இந்த AI கருவி உதவும். ஏற்கனவே ரிஸ்க் அடிப்படையில் நிறுவனங்களை வகைப்படுத்தும் FSSAI, இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தவுள்ளது.
இந்த மாற்றத்தால் வரும் காலங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் Compliance செலவுகள் உயர வாய்ப்புள்ளதா என்பதை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
