பண்டிகைக்கால விற்பனை **25%** சரிந்ததால், ஸ்மார்ட்போன் மற்றும் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் வரும் காலாண்டில் உற்பத்தியை **20%** குறைக்க முடிவு செய்துள்ளன. மெமரி சிப் விலை உயர்வால் ஏற்பட்ட விலை ஏற்றம் நுகர்வோர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விற்பனை சரிவும் நிறுவனங்களின் அதிரடி முடிவும்
கடந்த பண்டிகைக்கால விற்பனை எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. விற்பனை அளவு சுமார் 25% சரிந்ததால், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படாத பொருட்கள் தேங்கியுள்ளன. இதனால், பணப்புழக்கத்தை (Cash Flow) பாதுகாக்க, அடுத்த 3 மாதங்களுக்கு உற்பத்தியை 20% குறைக்க ஸ்மார்ட்போன் மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விலை உயர்வால் ஏற்பட்ட சிக்கல்
இந்த உற்பத்தி குறைப்பிற்கு முக்கிய காரணம் மெமரி சிப் (Memory Chip) விலை உயர்வுதான். AI தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் பாகங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஸ்மார்ட்போன்களின் விலை 35% முதல் 40% வரையிலும், டிவிகளின் விலை 20% முதல் 25% வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உணர்திறன் கொண்ட நுகர்வோர் இந்த விலையுர்வால் தற்காலிகமாக விலகி உள்ளனர்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
பங்குச் சந்தையில் உள்ள மின்னணு சாதனங்கள் (Consumer Durables) துறை நிறுவனங்களுக்கு இது சவாலான காலம். அதிகப்படியான இருப்பு (Inventory) காரணமாக, நிறுவனங்களுக்கு செயல்பாட்டு மூலதனத் தேவை (Working Capital) அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை நிறுவனங்கள் பொருட்களை விற்க அதிரடி தள்ளுபடியை அறிவித்தால், அது லாப வரம்பை (Profit Margin) கடுமையாக பாதிக்கும்.
தற்போதைய நிலையில், பெரிய ரக டிவிகள் (65 அங்குலத்திற்கு மேல்) ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும், மற்ற பாகங்களின் விலை உயர்வு கவலை அளிக்கிறது. வரும் காலாண்டு முடிவுகளின் போது, நிறுவனங்களின் இருப்புநிலை மற்றும் உற்பத்தி திறன் குறித்த தகவல்கள், இந்த துறை மீண்டும் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும் என்பதை தீர்மானிக்கும்.
