இந்தியாவின் சிறிய நகரங்களை குறிவைத்து தனது Prime சந்தாவை விரிவாக்கம் செய்கிறது Amazon. இதற்காக **₹2,800 கோடி** முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வளர்ந்து வரும் நஷ்டம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் சிறு நகரங்கள் (Tier-2 & Tier-3 cities) தான் Amazon-ன் அடுத்த இலக்கு. தற்போது புதிய Prime சந்தாதாரர்களில் 70% பேர் இந்த சிறிய நகரங்களில் இருந்தே வருவதால், அங்கு தனது பிடியை இறுக்க நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக 2026-ஆம் ஆண்டிற்குள் ₹2,800 கோடி முதலீட்டில் 20 புதிய ஃபுல்பில்மென்ட் சென்டர்கள் மற்றும் 150 டெலிவரி ஸ்டேஷன்களை உருவாக்க Amazon திட்டமிட்டுள்ளது.
சந்தையை பிடிக்க அதிரடி வியூகம்
Great Indian Festival-ஐ முன்னிட்டு, புதிய பயனர்களை ஈர்க்க கேஷ்பேக் மற்றும் அதிரடி தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. வெறும் விலையை மட்டும் நம்பி இல்லாமல், நீண்ட கால பிராண்ட் விசுவாசத்தை (Brand Loyalty) உருவாக்குவதே இதன் நோக்கம். தற்போது 400 நகரங்களில் 1.6 லட்சம் தற்காலிக ஊழியர்களுடன் தனது லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை Amazon விரிவுபடுத்தியுள்ளது.
கவலையளிக்கும் நிதிநிலை அறிக்கை
இந்த வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், நிதி ரீதியாக சவால்கள் தொடர்கின்றன. Amazon Retail India நிறுவனம் ₹3,080 கோடி வருவாய் ஈட்டிய போதிலும், ₹1,158 கோடி நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. அதேபோல், Amazon Pay India நிறுவனம் ₹2,484.4 கோடி வருவாய் ஈட்டி, ₹1,148.5 கோடி நஷ்டத்தை கண்டுள்ளது.
உலக அளவில் 2026-ல் மட்டும் $220 பில்லியன் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள Amazon-க்கு, இந்த அதிகப்படியான செலவுகள் நீண்ட கால கடன் மற்றும் கேஷ் ஃப்ளோ (Free Cash Flow) குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த சிறு நகர வாடிக்கையாளர்கள், தள்ளுபடி சலுகைகள் இன்றி தொடர்ந்து Amazon-ஐ பயன்படுத்துவார்களா என்பதே பெரிய கேள்வி. லாஜிஸ்டிக்ஸ் செலவுகளை குறைத்து, இந்திய கிளைகள் எப்போது லாபப் பாதைக்கு திரும்பும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
