இந்தியாவின் வசம் இப்போது **880 டன்** தங்கம் உள்ளது. இவ்வளவு தங்கத்தையும் வெறும் லாக்கரில் அடைத்து வைக்காமல், GIFT City-ல் உள்ள India International Bullion Exchange (IIBX) மூலம் லாபகரமான முதலீடாக மாற்ற RBI திட்டமிட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக இந்தியாவின் தங்கம் லண்டனில் உள்ள Bank of England லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறி, இந்தியாவின் 77% தங்க இருப்பு நமது எல்லைகளுக்குள்ளேயே கொண்டு வரப்பட்டுவிட்டது. இப்போது RBI-ன் அடுத்த இலக்கு, இந்த தங்கத்தை வெறும் உலோகமாக பார்க்காமல், ஒரு வருமானம் தரும் சொத்தாக மாற்றுவதாகும்.
GIFT City-ன் புதிய ரோல்
இந்தத் திட்டத்தின் மையப்புள்ளி GIFT City-ல் உள்ள IIBX (India International Bullion Exchange) தான். இந்தத் தங்கத்தை வெறும் லாக்கரில் வைப்பதற்குப் பதிலாக, சர்வதேச அளவில் தங்க வர்த்தக மையமாக இந்தியாவை மாற்றும் முயற்சி இது. லண்டன் சந்தைகளுக்கு மாற்றாக, இந்தியாவிலேயே தங்கத்தை அடமானம் வைப்பது (Gold Lending), மாற்றிக் கொள்வது (Swaps) போன்ற செயல்பாடுகளை கொண்டு வர முடியும்.
லாபத்தை அள்ளும் திட்டம்
பொதுவாக மத்திய வங்கிகள் தங்கத்தை வைத்திருப்பதன் மூலம் பெரிய லாபம் கிடைப்பதில்லை. ஆனால், இந்தத் தங்கத்தை கமர்ஷியல் வங்கிகளுக்கு கடன் கொடுப்பதன் மூலமோ அல்லது கரன்சி நிர்வாகத்திற்கு அடமானமாக பயன்படுத்துவதன் மூலமோ நல்ல வருவாயை ஈட்ட முடியும். இதற்கு GIFT City-ல் மிக வலுவான மற்றும் வேகமான வர்த்தகக் கட்டமைப்பு தேவைப்படுகிறது.
பொதுமக்களின் தங்கத்திற்கு என்ன பயன்?
இந்தியாவில் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, மின்னணு முறையிலான 'Electronic Gold Receipts' மூலம் முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வரவும் வழிவகை செய்யப்படுகிறது. இந்தியா தங்கத்தை அதிகம் நுகரும் நாடு என்பதால், உலக சந்தையில் 'Price Follower'-ஆக இருக்கும் நிலையை மாற்றி, இந்தியாவே தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் 'Market Maker'-ஆக மாற முடியும் என்பதே நிபுணர்களின் எதிர்பார்ப்பு.
