2026-ல் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், பல குடும்பங்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய நகைகளை விற்று கல்வி மற்றும் வீட்டுத் தேவைகளுக்குப் பணமாக மாற்றுகின்றனர். இதனால் கோல்டு ரீசைக்கிளிங் மற்றும் கோல்டு லோன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1,75,000 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்ட நிலையில், இந்திய குடும்பங்களின் முதலீட்டு பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குடும்ப சொத்தாக கருதப்பட்ட தங்கத்தை, இப்போது மக்கள் தங்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றும் கருவியாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.
ரீசைக்கிளிங் கலாச்சாரம்
2026-ன் முதல் பாதியில் மட்டும் தங்கத்தை மறுசுழற்சி (Recycling) செய்யும் செயல்பாடு சுமார் 60% அதிகரித்துள்ளது. பழைய நகைகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை, மக்கள் வீடு வாங்கவோ அல்லது வெளிநாட்டு கல்விச் செலவுகளுக்கோ பயன்படுத்துகின்றனர். இதனால் வங்கிகள் மற்றும் NBFC-களில் கோல்டு லோன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, கோல்டு லோன் துறை $197 பில்லியன் அளவிற்கு வளர்ந்துள்ளது, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 73% உயர்வாகும்.
சில்லறை வணிகத்தில் மாற்றம்
பெரிய ஜூவல்லரி நிறுவனங்கள் இப்போது தங்கத்தை விற்கும் கடைகளாக மட்டுமல்லாமல், அதைத் திரும்பப் பெறும் 'ரீசைக்கிளிங் ஹப்'களாகவும் மாறி வருகின்றன. இது அவர்களுக்கு புதிய தங்க இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, உள்நாட்டிலேயே தங்கம் கிடைக்க வழிவகை செய்கிறது.
கவனிக்க வேண்டிய அபாயங்கள்
சந்தையில் தங்கம் விலை ஏறியிருப்பதால், மக்கள் ஆங்காங்கே உள்ள முறைப்படுத்தப்படாத (Unorganized) கடைகளில் தங்கத்தை விற்கின்றனர். இதில் தரப் பரிசோதனை சரியாக இருக்காது என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய நகைகளுக்குக் குறைந்த மதிப்பையே பெற வாய்ப்புள்ளது. மேலும், அவசரத் தேவைக்காக தங்கத்தை விற்கும் போது, பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணை அவர்கள் இழக்க நேரிடும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
