இந்தியாவில் பருத்தி விலை குவிண்டாலுக்கு **₹9,200** முதல் **₹9,500** வரை உயர்ந்துள்ளது. இது அரசாங்கத்தின் MSP விலையை விட அதிகம் என்பதால், டெக்ஸ்டைல் நிறுவனங்களின் லாப வரம்பு (Profit Margin) கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
சர்வதேச அளவில் பருத்தி விலை (ICE Cotton) குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் விலை குறையாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தற்போது ஒரு குவிண்டால் பருத்தி ₹9,200 முதல் ₹9,500 வரை விற்பனையாகிறது. 2026-27 சீசனுக்கான அரசு நிர்ணயித்த MSP விலை முறையே ₹8,267 மற்றும் ₹8,667 ஆக உள்ள நிலையில், சந்தை விலை அதை விட அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.
டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஏன் இந்த சிக்கல்?
பருத்தி வரத்து ஒரு மாதம் தாமதமாக வருவதால் சந்தையில் சப்ளை குறைவாக உள்ளது. இதனால், விலை குறையாமல் வலுவாக நிற்கிறது. அதே சமயம், யான் (Yarn) தேவை சந்தையில் மிக மந்தமாக உள்ளது. மூலப்பொருட்களை அதிக விலைக்கு வாங்கி, முடிக்கப்பட்ட பொருட்களை அதே விலைக்கு விற்க முடியாத நெருக்கடியில் டெக்ஸ்டைல் மில்கள் உள்ளன.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை:
- சப்ளை அப்டேட்: தற்போது வாரத்திற்கு 50,000 பேல்கள் மட்டுமே வருகின்றன. வரும் நாட்களில் இது இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பயிர் நிலவரம்: வேளாண் அமைச்சகத்தின் படி, சுமார் 109.17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் அறுவடை தீவிரமடையும் போது விலை குறைய வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போது பல நிறுவனங்கள் புதிய முதலீடுகளை தவிர்த்து, கையிருப்பில் உள்ள பொருட்களை வைத்து பிசினஸை நகர்த்துகின்றன. வரும் காலாண்டு முடிவுகளின் போது, இந்த நிறுவனங்கள் எவ்வாறு தங்கள் லாப வரம்புகளைப் பராமரிக்கின்றன என்பதை கவனிப்பது அவசியம்.
