IFSCA வெளியிட்ட 'Good Delivery Guidelines 2026' மூலம் இந்திய தங்க சுத்திகரிப்பு நிலையங்கள் உலகளாவிய தரத்திற்கு இணையாக மாற்றப்படுகின்றன. India International Bullion Exchange (IIBX) மூலம் தங்கம் வாங்கும் நாடாக இருந்த இந்தியா, இனி உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாறத் துடிக்கிறது.
தங்கம் நுகர்வோராக மட்டுமே இருந்த இந்தியாவை, உலகளாவிய வர்த்தக மையமாக மாற்ற IFSCA அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்தியாவின் தங்க சுத்திகரிப்பு திறன் தற்போது ஆண்டுக்கு 1,200 டன் என்ற அளவில் உள்ளது, ஆனால் நம் நாட்டின் தேவை வெறும் 800 முதல் 850 டன் மட்டுமே. இந்த உபரித் தங்கத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல இதுவரை இருந்த தடையை உடைக்கவே இந்த புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:
- வெளிப்படைத்தன்மை: தங்கத்தின் உரிமையாளர்களை முறையாக அடையாளம் காணுதல்.
- ஆவணங்கள்: பரிவர்த்தனை விவரங்களை குறைந்தது 8 ஆண்டுகள் வரை பராமரித்தல்.
- கண்காணிப்பு: சப்ளை செயினில் எவ்விதமான சட்டவிரோத அல்லது மோதல் நிறைந்த பகுதிகளிலிருந்து தங்கம் வருவதில்லை என்பதை உறுதிப்படுத்துதல்.
சவால்கள் என்ன?
இந்த மாற்றங்கள் நீண்ட கால அடிப்படையில் பெரும் வளர்ச்சியை தந்தாலும், சிறிய மற்றும் நடுத்தர ரிபைனரிகளுக்கு இந்த கடுமையான தணிக்கை (Audit) நடைமுறைகளை பின்பற்றுவது சவாலாகவே இருக்கும். செலவுகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாடுகள் இதற்கு மிக முக்கியம். லண்டன் சந்தைக்கு இணையான அங்கீகாரத்தை பெற, இந்தியாவின் இந்த புதிய விதிமுறைகள் சர்வதேச அளவில் எவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும்.
தற்போது Financial Action Task Force-ன் நேர்மறையான மதிப்பீடுகளுக்குப் பிறகு, இந்திய அரசு தனது நிதி வெளிப்படைத்தன்மையை உயர்த்த தீவிரம் காட்டி வருகிறது. IIBX மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகள் இணைந்து, இந்திய தங்கம் சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஒரு பிராண்டாக மாற வியூகம் அமைத்து வருகின்றன.
