உலக சந்தையில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றங்கள் காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி முறைகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு அதிகரித்து வருகிறது.
புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் 18 நாட்களில், இந்தியாவின் தினசரி கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு சராசரியாக 4.85 மில்லியன் பேரல்கள் ஆக இருந்தது. இது ஜனவரி மாதத்தின் 5.25 மில்லியன் பேரல்கள் என்ற அளவை விட சுமார் 8% குறைவாகும். அமெரிக்கா விதித்துள்ள ரஷ்யா மீதான தடைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகள் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகம் டிசம்பர் 2025-ல் தினமும் 1.28 மில்லியன் பேரல்கள் ஆக இருந்த நிலையில், ஜனவரியில் 1.22 மில்லியன் பேரல்களாகவும், பிப்ரவரி தொடக்கத்தில் சுமார் 1.09 மில்லியன் பேரல்களாகவும் குறைந்துள்ளது. இது மாதந்தோறும் சுமார் 10% சரிவு. மார்ச் மாதத்தில் இந்த அளவு 8 லட்சம் முதல் 10 லட்சம் பேரல்கள் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போருக்குப் பிறகு தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருந்தது. ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, இந்த இறக்குமதிகள் உச்சகட்டத்தை விட குறைவாகவே நீடிக்கும் என தெரிகிறது.
இந்த இடைவெளியை நிரப்ப, மத்திய கிழக்கு நாடுகள் களமிறங்கியுள்ளன. குறிப்பாக, சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் 10 லட்சம் முதல் 11 லட்சம் பேரல்கள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நவம்பர் 2019-க்கு பிறகு இல்லாத உச்சமாகும். இதன் மூலம், பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு சவுதி அரேபியா முதன்மை கச்சா எண்ணெய் சப்ளையராகவும், ரஷ்யா மற்றும் ஈராக் அடுத்தடுத்த இடங்களிலும் வருகின்றன.
தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு பதிலாக, மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய்க்கு மாறும் போது, இந்தியாவின் கச்சா எண்ணெய் வாங்கும் செலவு ஒரு பேரலுக்கு சுமார் $2 முதல் $3 வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தாலும், உற்பத்தி மற்றும் விநியோக சிக்கல்கள் காரணமாக அவற்றை முழுமையாக நம்ப முடியாது. குஜராத்தில் உள்ள வதினா (Vadinar) ரிஃபைனரி, ரஷ்ய கச்சா எண்ணெயையே அதிகம் சார்ந்துள்ளதால், இந்த விலை உயர்வு மற்றும் விநியோக மாற்றங்களால் பாதிக்கப்படும்.
எதிர்காலத்தில், விலை மட்டுமல்லாமல், தடைகள், விநியோக சிக்கல்கள், லாஜிஸ்டிக்ஸ் போன்ற காரணிகளே கச்சா எண்ணெய் சந்தையை தீர்மானிக்கும். பல ரிஃபைனரிகள் ஏற்கனவே மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் கச்சா எண்ணெயை அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கியுள்ளன. இந்தியா தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய போதுமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும். ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் வரை, கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செலவு உயர்வு, ரிஃபைனரிகளின் லாப வரம்புகளை பாதிக்கக்கூடும்.