உணவகங்கள் இயக்க முடியாமல் தவிப்பு!
இந்தியாவில் நிலவும் கடுமையான கமர்ஷியல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, நாடு முழுவதும் உள்ள உணவகங்களை இயக்க முடியாமல் தவிக்க வைக்கிறது. உரிமையாளர்கள் கூறுகையில், சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாரக்கணக்கில் காத்திருந்தாலும், அவை வந்து சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கின்றனர். இதன் காரணமாக, பல உணவகங்கள் தங்கள் செயல்பாட்டு நேரத்தைக் குறைக்கவும், அல்லது தற்காலிகமாக மூடவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சமோசா, சோலே பட்ரே போன்ற பிரபலமான வறுத்த உணவுகளை நம்பி செயல்படும் சாலையோர கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
கமாடிட்டி இறக்குமதியில் தாக்கம்?
இந்த செயல்பாட்டு குறைப்பு, சமையலுக்குத் தேவையான முக்கியப் பொருட்களின் நுகர்வையும் நேரடியாகப் பாதித்துள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் சமயங்களில் உச்சத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய்களுக்கான தேவை இப்போது வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலைமை, பாமாயில், சோயாபீன் ஆயில், சூரியகாந்தி எண்ணெய் போன்ற முக்கிய கமாடிட்டிகளுக்கான இந்தியாவின் இறக்குமதியை கணிசமாகக் குறைக்கக்கூடும் என தொழில் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி சுமார் 9% சரிவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.