இந்தியாவின் காப்பர் தேவை **10 மில்லியன்** டன்களாக உயரும் நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய **$140 பில்லியன்** செலவாகும் என ICAI எச்சரித்துள்ளது. இதை தவிர்க்க பழைய ஆலைகளை இயக்குதல் மற்றும் மறுசுழற்சி முறையை வலுப்படுத்த திட்டம் தீட்டியுள்ளது.
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருட்களில் காப்பர் (Copper) மிக முக்கியமானது. ஆனால், இந்தியாவின் தேவை ஆண்டுக்கு 9% க்கும் மேல் அதிகரித்து வருவதால், உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ICAI (International Copper Association India) இந்த சூழலை சமாளிக்க அதிரடி திட்டங்களை முன்வைத்துள்ளது.
காப்பரை சேமிக்க புதிய திட்டம்
தங்கம் மற்றும் பிற கனிமங்களை அரசு கையிருப்பு (Strategic Reserve) வைப்பது போல, காப்பரையும் கையிருப்பில் வைக்க வேண்டும் என ICAI வலியுறுத்துகிறது. தற்போது இந்தியாவிடம் 15 மில்லியன் டன் காப்பர் கையிருப்பில் உள்ளது, இது சீனாவிடம் உள்ள 120 மில்லியன் டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உள்ள 80 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
ரீசைக்கிள் (Recycle) மற்றும் புதிய வாய்ப்புகள்
வெறும் சுரங்கங்களை மட்டும் நம்பியிருக்காமல், பயன்படுத்தப்பட்ட உலோகங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் (Above-ground stocks) தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதற்காக, ஜிஎஸ்டி (GST) போன்ற வரி அமைப்புகளில் மாற்றங்கள் கொண்டு வந்து, மறுசுழற்சி துறையை முறையாக முறைப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்
புதிதாக ஆலைகளைக் கட்டுவதற்குப் பதில், ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் உற்பத்தி வேகமெடுக்கும். இதில் முக்கியமாக, தூத்துக்குடியில் உள்ள Vedanta நிறுவனத்திற்குச் சொந்தமான Sterlite Copper ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து ICAI கவனம் ஈர்த்துள்ளது. பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் இந்த ஆலையைச் செயல்படுத்துவது, இறக்குமதிச் சுமையைக் குறைக்க ஒரு தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.
மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) தேவை அதிகரித்துள்ள நிலையில், அரசின் கொள்கை முடிவுகள் எப்படி அமையப்போகிறது என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
