காப்பர் விலை சரிவுக்கான சாத்தியம்
காப்பர் விலை சமீபத்தில் ₹8,000 மெட்ரிக் டன்னில் இருந்து சுமார் ₹14,000 வரை கடுமையாக உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், உலகெங்கிலும் உள்ள பெரிய சுரங்கங்களில் ஏற்பட்ட உற்பத்தித் தடங்கல்கள்தான். சுற்றுச்சூழல், நடைமுறை சிக்கல்கள், கனமழை, நிலச்சரிவு போன்ற பல காரணங்களால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தடங்கல்களால் சந்தையில் காப்பர் தட்டுப்பாடு நிலவியது.
ஆனால், இப்போது நிலைமை மாறப்போகிறது. மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ்-ன் கமாடிட்டி மற்றும் கரன்சி ரிசர்ச் தலைவர் நவ்நீத் தமானி கூறுகையில், உலக அளவில் தற்போது காப்பர் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், போதுமான சப்ளை இருப்பதாகவும் தெரிவித்தார். "2026 ஜூன் மாதத்திற்குப் பிறகு உற்பத்தி மீண்டும் சந்தைக்கு வரத் தொடங்கினால், சந்தையில் போதுமான அளவு காப்பர் இருக்கும். இதனால், அடுத்த இரண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் விலை ஒரு நிலையான நிலையை அடையலாம் அல்லது கணிசமாக குறையலாம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். குறுகிய காலத்தில், காப்பர் விலை $11,500–$12,000 மெட்ரிக் டன் வரை சரிய வாய்ப்புள்ளது. வெள்ளி விலை திடீரென உயர்ந்தாலோ அல்லது டாலர் இன்டெக்ஸ் பலவீனமடைந்தாலோ மட்டுமே காப்பரில் பெரிய ஏற்றம் காணப்படும்.
வெள்ளியின் டாலரைச் சார்ந்த விலை நகர்வுகள்
வெள்ளி விலையும் சமீபத்தில் உயர்ந்திருந்தாலும், இந்த ஏற்றங்களுக்கு முக்கிய காரணம் அடிப்படை தேவையை விட சந்தையின் வேகம் (momentum)தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். $100 டாலருக்கு மேல் வெள்ளி விலை சென்றால், அது கடும் சரிவை சந்திக்கும் என தமானி எதிர்பார்க்கிறார். உலக நாணயங்களின் நகர்வுகளைப் பொறுத்து, வெள்ளி விலை $65 முதல் $95 டாலர் வரை ஒரு குறிப்பிட்ட ரேஞ்சில் வர்த்தகமாகும் என்று அவர் கணித்துள்ளார்.
சோலார் எனர்ஜி, AI சார்ந்த தொழில்துறை பயன்பாடுகள் போன்ற துறைகளில் வெள்ளிக்கு தேவை இருந்தாலும், அதன் விலை நகர்வுகள் டாலர் இன்டெக்ஸால் பெரிதும் பாதிக்கப்படும். வரவிருக்கும் காலாண்டுகளில் டாலர் இன்டெக்ஸ் 92–94 என்ற அளவிற்கு பலவீனமடைந்தால், தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற கமாடிட்டிகளுக்கு தற்காலிக ஆதரவு கிடைக்கும். எனினும், வலுவான அடிப்படை தேவைக்கான சிக்னல்கள் இல்லாமல் தொடர்ச்சியான ஏற்றங்களைக் காண்பது கடினம்.