இந்திய பங்குச்சந்தை இனி வெறும் பணப்புழக்கத்தை (Liquidity) மட்டும் நம்பி இருக்காது என SBICAP Securities CEO பல்தேவ் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இனி நிறுவனங்களின் உண்மையான லாப வளர்ச்சியே (Earnings Growth) முதலீட்டாளர்களுக்கு லாபத்தை பெற்றுத் தரும்.
இந்திய பங்குச்சந்தை தற்போது ஒரு முக்கியமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சந்தையில் இருந்த அதிகப்படியான பணப்புழக்கம் மட்டுமே பங்குகளை மேலே தூக்கி வந்தது. ஆனால், இனி அந்த காலம் மாறி, நிறுவனங்களின் உண்மையான லாபத்திறன் மற்றும் நிலையான வளர்ச்சி மட்டுமே ஒரு பங்கின் விலையை தீர்மானிக்கும் என SBICAP Securities-ன் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO பல்தேவ் பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
தற்போது சந்தையில் 15% முதல் 20% வரை ஆண்டு வருமானத்தை ஈட்டக்கூடிய உயர்தர நிறுவனங்களை கண்டறிந்து முதலீடு செய்வதே சிறந்தது. குறிப்பாக வங்கி, பாதுகாப்பு (Defense), மின்சார பரிமாற்றம் (Power Transmission) மற்றும் மின்னணு உற்பத்தி (EMS) ஆகிய துறைகளில் நல்ல டிமாண்ட் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் இருக்கும் சவால்கள்
சந்தை நல்ல போக்கில் இருந்தாலும், சில முக்கிய ரிஸ்க்குகளை நாம் கவனிக்க வேண்டும்:
- கச்சா எண்ணெய் விலை: கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்து, சர்வதேச அளவில் வட்டி விகிதங்களை பாதிக்கலாம்.
- புவிசார் அரசியல்: மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பதற்றம் எரிசக்தி விலையை திடீரென மாற்றக்கூடும்.
- மார்ஜின் அழுத்தம்: சிமெண்ட், ஆக்ரோ-கெமிக்கல்ஸ் மற்றும் ஆயில் மார்க்கெட்டிங் போன்ற துறைகள் தற்போது இன்புட் காஸ்ட் (Input cost) அழுத்தத்தில் உள்ளன.
SIP-ன் பலம்
வெளிநாட்டு சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், இந்திய சந்தையில் தற்போது SIP (Systematic Investment Plan) முதலீடுகள் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக உள்ளன. மக்கள் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை விட, பங்குச்சந்தையை நோக்கி பணத்தை முதலீடு செய்வது சந்தைக்கு வலுவான அடித்தளத்தை கொடுத்துள்ளது.
முதலீட்டாளர்கள் இப்போது கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. நிறுவனங்கள் தங்களின் செலவுகளை எவ்வாறு கையாளுகின்றன மற்றும் லாபத்தை தொடர்ந்து உயர்த்துகிறார்களா என்பதை கண்காணிப்பது நீண்ட கால அடிப்படையில் வெற்றிக்கு வழிவகுக்கும்.
