பிரபல குளோபல் ப்ரோக்கரேஜ் நிறுவனமான Jefferies, SBI Funds Management பங்கிற்கு 'Buy' ரேட்டிங் வழங்கியுள்ளது. State Bank of India உடனான வலுவான நெட்வொர்க் தொடர்பே இதற்கு முக்கிய காரணம்.
ஜூலை 2026-ல் பங்குச்சந்தையில் அறிமுகமான SBI Funds Management, தற்போது சந்தை நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, குளோபல் ப்ரோக்கரேஜ் நிறுவனமான Jefferies, இந்த பங்கிற்கு 'Buy' ரேட்டிங் கொடுத்துள்ளதுடன், டார்கெட் விலையை ₹710 ஆக நிர்ணயித்துள்ளது.
ஏன் இந்த பாசிட்டிவ் பார்வை?
இதற்கு முக்கிய காரணம் 'State Bank of India' உடனான கூட்டணிதான். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI-ன் கிளைகள் மூலம், சிறிய நகரங்களிலும் (Tier-2 & Tier-3 cities) எளிதாக வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் சென்றடைகிறது. இந்த 'Distribution Moat' காரணமாக, மார்க்கெட்டிங் செலவுகள் பெரிய அளவில் இல்லாமல் புதிய முதலீடுகளை ஈர்க்க முடிகிறது. இதன் மூலம் 2029 நிதியாண்டு வரை இயக்க லாபம் (Operating Profit) ஆண்டுக்கு 15% விகிதத்தில் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி மற்றும் சவால்கள்
நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (AUM) ஆண்டுக்கு 18% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனத்தின் வளர்ச்சி பெரும்பாலும் SBI-ஐ மட்டுமே சார்ந்திருப்பது ஒரு சவாலாக கருதப்படுகிறது. வங்கியின் விநியோக கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் அது வருவாயைப் பாதிக்கலாம். அதேபோல், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நிலவும் கடும் போட்டியையும், முதலீட்டு வருவாய் சீராக இருப்பதை உறுதி செய்வதையும் நிறுவனம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது இந்த பங்கு சற்று அதிக வேல்யுவேஷனில் வர்த்தகமாவதால், நீண்ட கால முதலீட்டாளர்கள் லாப வளர்ச்சி மற்றும் மார்ஜின் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.
