இந்திய சிமெண்ட் துறையில் நிலவும் அதிகப்படியான உற்பத்தி மற்றும் போட்டி காரணமாக, சிமெண்ட் பங்குகளின் விலை உயர்வு இனி குறைவாகவே இருக்கும் என Kotak Institutional Equities எச்சரித்துள்ளது.
சிமெண்ட் துறையில் தற்போது நிலவும் சந்தை உற்சாகம், நிறுவனங்களின் உண்மையான செயல்பாட்டுத் திறனுடன் ஒத்துப்போகவில்லை என்று Kotak Institutional Equities தெரிவித்துள்ளது. 2027 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் லாபம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே பங்குகளின் விலையில் ஏறிவிட்டதால், மேற்கொண்டு பெரிய அளவிலான விலை உயர்வுக்கு வாய்ப்பு குறைவு என்கிறது அந்த அறிக்கை.
உற்பத்தி அதிகரிப்பும் சவால்களும்
இந்திய சிமெண்ட் சந்தையில் தேவைக்கும் அதிகமான உற்பத்தி (Supply Glut) பெரிய தலைவலியாக மாறியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் திறனை வேகமாக விரிவாக்கி வருகின்றன. தேவைக்கு அதிகமாக சிமெண்ட் சந்தைக்கு வருவதால், நிறுவனங்களால் விலையை உயர்த்த முடிவதில்லை. கடுமையான போட்டியில், உற்பத்திச் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கும் (Pass on cost) திறனும் நிறுவனங்களுக்குக் குறைந்துவிட்டது.
வேல்யூயேஷன் அழுத்தம்
சிமெண்ட் என்பது ஒரு கமாடிட்டி (Commodity) தொழில் என்பதால், அதற்கு அதிகப்படியான பிரீமியம் வேல்யூயேஷன் கொடுக்கப்படுவது ஆபத்தானது. பசுமை எரிசக்தி மாற்றம் மற்றும் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குறித்து முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், அது இன்னும் பெரிய லாபமாக மாறவில்லை. போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய உயர்ந்த வேல்யூயேஷனை நிறுவனங்கள் தக்கவைப்பது கடினமாக இருக்கும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
எதிர்காலத்தில் சிமெண்ட் நிறுவனங்களின் நிதி ஆரோக்கியத்தை அறிய, 'Capacity Utilization' எனப்படும் உற்பத்தித் திறன் பயன்பாட்டை கவனிக்க வேண்டும். புதிய சப்ளை சந்தைக்கு வரும்போது, சிமெண்ட் நிறுவனங்கள் தங்கள் விலையை நிலைநிறுத்துகிறார்களா என்பதைப் பார்ப்பது அவசியம். மேலும், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டங்களில் தேவை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே சிமெண்ட் பங்குகளின் நீண்டகால நகர்வு இருக்கும்.
