இந்திய நிறுவனங்கள் நிதி ரீதியாக வலுவாக உள்ளன, ஆனால் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் விலை (Valuation) அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாக JM Financial தெரிவித்துள்ளது. மேலும், உயரும் கச்சா எண்ணெய் விலை லாப வரம்பிற்கு சவாலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த காலத்தை விட தற்போது மிகவும் வலுவான நிதி கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கடனைக் குறைத்தது, குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரி மற்றும் வலுவான பணப்புழக்கம் ஆகியவை நிறுவனங்களை பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயார் நிலையில் வைத்துள்ளன. குறிப்பாக, Nifty 50-ல் உள்ள நிதி சாரா நிறுவனங்கள் குறைந்த அளவிலான நிகரக் கடனை (Net Debt) கொண்டுள்ளதால், பெரிய சந்தை பங்குகள் பாதுகாப்பான நிலையில் உள்ளன.
சிறிய பங்குகளின் விலை அபாயம் (Valuation Risks)
பெரிய நிறுவனங்கள் சிறப்பாக இருந்தாலும், ஸ்மால் மற்றும் மிட்-கேப் பங்குகள் தற்போது மிக அதிக விலையில் (Overvalued) வர்த்தகமாகின்றன. Nifty Midcap 150 இன்டெக்ஸ் அதன் வருவாயைப் போல 28 மடங்குக்கும் மேலாக வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல், Nifty Smallcap 250 இன்டெக்ஸ் அதன் வரலாற்று சராசரியான 18-19 மடங்கை விட அதிகரித்து, தற்போது 24 மடங்கு விலையில் உள்ளது. இதனால், வருவாய் வளர்ச்சி எதிர்பார்ப்பை விடக் குறைந்தால், இந்த பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
ஆயில் விலை பாதிப்பு
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $90 - $100 என்ற அளவில் நீண்ட காலம் நீடித்தால், அது ரூபாயின் மதிப்பையும், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் (Current Account Deficit) பாதிக்கும். கெமிக்கல், பெயிண்ட், டயர் மற்றும் FMCG போன்ற இறக்குமதியைச் சார்ந்த துறைகள், மூலப்பொருட்களின் விலை உயர்வாலால் தங்கள் லாப வரம்பைத் (Profit Margin) தக்கவைக்க சிரமப்படலாம்.
வங்கித் துறையில் முன்னுரிமை
நிதித் துறையில், முன்னணி தனியார் வங்கிகள் வரலாற்று சராசரியை விட 30-40% தள்ளுபடியில் கிடைப்பது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இதில் ICICI Bank முதன்மையான தேர்வாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் State Bank of India மட்டும் கவனிக்கத்தக்க விதிவிலக்காக உள்ளது.
வருவாய் இலக்கு
இந்த நிதியாண்டில் Nifty 50 நிறுவனங்களின் ஈபிஎஸ் (EPS) வளர்ச்சி இலக்கு 15.2% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் 12.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள ஒன்பது மாதங்களில் சுமார் 16.7% வளர்ச்சியை எட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் வரும் காலாண்டு முடிவுகள் மற்றும் நுகர்வுத் தேவைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
