கல்லூரியில் சீட் கிடைத்ததும் கல்விக் கடன் வாங்கிவிடலாம் என்று நினைப்பது தவறு. வங்கிகள் கடன் விண்ணப்பங்களை மிகக் கடுமையாக பரிசீலிக்கின்றன. கடன் நிராகரிக்கப்பட்டால், குடும்பங்கள் கடைசி நிமிடத்தில் மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும்.
பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், கல்விக் கடன் (Education Loan) எளிதாகக் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFCs) கல்விக் கடன்களை ஒரு முக்கியமான நிதி தயாரிப்பாகவே கருதுகின்றன. கடன் கொடுப்பதற்கு முன்பு கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. ஒரு மாணவர் கல்லூரி சேர்க்கை பெற்ற பின்னரும் கூட, கடன் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடன் நிராகரிப்புக்கு முக்கிய காரணங்கள்:
- இணை கடன் வாங்குபவரின் (Co-borrower) நிதி நிலை: கடன் வாங்குபவர் பொதுவாக பெற்றோராகவோ அல்லது பாதுகாவலராகவோ இருப்பார். பெரும்பாலான மாணவர்களுக்கு சொந்த வருமானம் அல்லது நீண்ட கால கடன் வரலாறு இல்லாததால், பெற்றோரின் திருப்பிச் செலுத்தும் திறனை வைத்தே கடன் வழங்கப்படுகிறது. பெற்றோரின் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) குறைவாக இருந்தாலோ, ஏற்கெனவே அதிக EMI சுமை இருந்தாலோ, அல்லது பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலோ, வங்கி கடனை அதிக ரிஸ்க் என்று கருதி நிராகரிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், இணை கடன் வாங்குபவரின் கிரெடிட் அறிக்கையை சரிபார்ப்பது நல்லது.
- கல்லூரி மற்றும் படிப்பு தகுதி: வங்கிகள் சில குறிப்பிட்ட கல்லூரிகள் மற்றும் படிப்புகளுக்கு மட்டுமே கடன் வழங்குகின்றன. அவை அந்த நிறுவனங்களின் தரவரிசை, வேலைவாய்ப்பு பதிவுகள் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றன. வங்கி நிர்ணயித்த தரத்தை பூர்த்தி செய்யாத படிப்பு அல்லது கல்லூரி, கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட ஒரு காரணமாக அமையலாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதலின்படி, கடன் வாங்குபவரின் எதிர்கால வருமான சாத்தியக்கூறுகளையும் வங்கிகள் சரிபார்க்க வேண்டும். எனவே, படிப்பின் வேலைவாய்ப்பு (Employability) முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஆவணங்கள்: முழுமையற்ற விண்ணப்பங்கள், ஆவணங்களில் பெயர்களில் உள்ள எழுத்துப் பிழைகள், கல்லூரிக் கட்டணத்திற்கும் கோரப்படும் தொகக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றவை கடன் செயல்முறையில் தாமதத்தை அல்லது நிராகரிப்பை ஏற்படுத்தலாம். கல்லூரி கட்டண அமைப்பு, சேர்க்கை சான்று, மற்றும் இணை கடன் வாங்குபவரின் வருமான ஆதாரம் போன்ற தெளிவான ஆவணங்களை வங்கிகள் எதிர்பார்க்கின்றன. உண்மையான கல்விச் செலவை விட மிக அதிகமான தொகையைக் கோருவதும் கடன் ஒப்புதல் செயல்முறையை சிக்கலாக்கலாம்.
அரசு திட்டங்களான PM-Vidyalaxmi போன்ற திட்டங்கள் மூலம் கல்விக் கடனை எளிதாக்க முயற்சிகள் இருந்தாலும், அவற்றுக்கும் குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கு ஒரே ஒரு காரணம் என்று சொல்லிவிட முடியாது. கிரெடிட் வரலாறு, படிப்பு தகுதி, அல்லது பிணை (Collateral) தேவைகள் போன்ற குறிப்பிட்ட காரணத்தைப் புரிந்துகொண்டு, அதை சரிசெய்த பிறகு மீண்டும் விண்ணப்பிப்பதே கடன் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.
