வருகிற அக்டோபர் 15, 2026 முதல், ரூ. 2,000-க்கு மேல் நடக்கும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் (MDR) வசூலிக்கப்பட உள்ளது. இந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கக்கூடாது என அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருகிற அக்டோபர் 15, 2026 முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ உள்ளது. இனி, ₹2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% Merchant Discount Rate (MDR) கட்டணம் விதிக்கப்படுகிறது. அதே சமயம், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்காக இந்தக் கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ₹300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நீண்ட காலத்திற்கு தடையின்றி இயங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை!
இந்த விதியின் மிக முக்கியமான அம்சம் நுகர்வோர் பாதுகாப்பு. Punjab & Sind Bank நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட வங்கித் தலைவர்கள் தெளிவாகக் கூறியுள்ளபடி, வியாபாரிகள் இந்தக் கட்டணத்தை எந்த வகையிலும் வாடிக்கையாளர்கள் மீது திணிக்கக் கூடாது. அதாவது, பொருளை வாங்கும் போது எக்ஸ்ட்ரா சார்ஜ் அல்லது சர்பார்ஜ் வசூலிப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் UPI பயன்பாட்டில் எந்தத் தடையும் இருக்காது.
யாருக்கு விலக்கு?
அனைத்து வியாபாரிகளுக்கும் இது பொருந்தாது. QR கோட் மூலம் மாதம் ₹1 லட்சம் க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் சிறு வியாபாரிகளுக்கு இதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது சிறு கடைக்காரர்களின் லாபத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவாகும்.
இருப்பினும், இந்த அறிவிப்பு வணிக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லாப வரம்பு குறைவாக உள்ள நிறுவனங்கள் இந்தக் கட்டணத்தைச் சுயமாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டலாம் என்று கூறப்படுகிறது. இதனால், மீண்டும் பணப் பரிவர்த்தனைக்கு (Cash) வியாபாரிகள் திரும்பக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் இன்னும் இடைக்காலத் தடை விதிக்காத நிலையில், திட்டமிட்டபடி அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருகிறது.
