முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக Adit Ventures மற்றும் அதன் CEO எரிக் மன்சன் மீது அமெரிக்க SEC (Securities and Exchange Commission) நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளது. SpaceX மற்றும் Klarna போன்ற நிறுவனங்களில் IPO-க்கு முந்தைய (pre-IPO) முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
SpaceX, Klarna பங்குகளில் மோசடியா?
அமெரிக்காவின் முன்னணி நிதி ஒழுங்குமுறை ஆணையமான SEC, நியூயார்க்-ஐ சேர்ந்த முதலீட்டு ஆலோசனை நிறுவனமான Adit Ventures Management, அதன் CEO எரிக் மன்சன் மற்றும் மூன்று துணை பங்குதாரர்கள் மீது மோசடி குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளது. SpaceX மற்றும் Klarna போன்ற பிரபல தனியார் நிறுவனங்களில், அவற்றின் பங்குகளை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, முதலீட்டாளர்களிடம் Adit Ventures தவறான தகவல்களைக் கூறியதாக SEC குற்றம் சாட்டியுள்ளது.
நிதியையும் திசைதிருப்பியதாக புகார்
2019 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் வரை இந்த முறைகேடுகள் நடந்ததாக SEC அதன் புகாரில் தெரிவித்துள்ளது. Adit Ventures வெறும் தவறான வாக்குறுதிகளை அளித்தது மட்டுமின்றி, முதலீட்டாளர்களின் நிதியை சொந்த தேவைகளுக்கும், மறைமுக கட்டணங்களுக்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம் இந்த காலகட்டத்தில் சுமார் $465.9 மில்லியன் சொத்துக்களை நிர்வகித்து வந்துள்ளது.
சமரச முயற்சி
இருப்பினும், Adit Ventures மற்றும் தொடர்புடையவர்கள் SEC உடன் ஒரு சமரச உடன்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி, அவர்கள் அபராதம் மற்றும் இழந்த நிதியைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த உடன்பாட்டிற்கு ஒரு ஃபெடரல் நீதிபதியின் ஒப்புதல் தேவைப்படுகிறது. ஆனால், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. CEO எரிக் மன்சன், SEC-யின் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், நீண்ட சட்டப் போராட்டங்களைத் தவிர்க்கவே இந்த சமரசத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
தனியார் சந்தை முதலீட்டின் அபாயங்கள்
இந்த வழக்கு, தனியார் சந்தைகளில் (pre-IPO) முதலீடு செய்வதில் உள்ள அபாயங்களை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. பொது பங்குச் சந்தைகளைப் போலல்லாமல், இங்கு வெளிப்படைத்தன்மையும், ஒழுங்குமுறை மேற்பார்வையும் குறைவாகவே இருக்கும். எனவே, இதுபோன்ற முதலீடுகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
