State Bank of India-வில் வங்கி ஊழியர்கள் சங்கம் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 11 முதல் அக்டோபர் வரை நடக்கவுள்ள இந்த வேலைநிறுத்தத்தால் வங்கிச் சேவைகளில் தடங்கல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
State Bank of India (SBI) தனது பங்குச் சந்தை அறிக்கையில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. SEBI-ன் ஒழுங்குமுறை விதி எண் 30-ன் கீழ் இந்தத் தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்ட கால அட்டவணை
வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத் திட்டங்களின்படி, செப்டம்பர் 11-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் முழு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கப்போவதாகவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
கோரிக்கைகள் என்ன?
United Forum of Bank Unions (UFBU) அமைப்பின் கீழ் ஏழு முக்கிய சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. மார்ச் 2024-ல் மேற்கொள்ளப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தின்படி இன்னும் நிறைவேற்றப்படாத 5 நாள் வேலை வார முறை மற்றும் Performance Linked Incentive (PLI) திட்டத்தில் மாற்றங்கள் கோருவதுதான் இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும்.
வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, போராட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை (Contingency Plans) செய்து வருவதாகக் கூறியுள்ளது. இருப்பினும், வேலைநிறுத்த நாட்களில் கிளைகளில் ஊழியர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதால், பணப் பரிமாற்றம், செக் கிளியரன்ஸ் மற்றும் இதர நிர்வாகப் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இந்திய வங்கிச் சங்கத்திற்கும் (IBA) தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடைபெறப்போகும் பேச்சுவார்த்தைகள் இந்தப் போராட்டத்தைத் தடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு வங்கியின் நிதி இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
