வங்கி ஊழியர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பால் பரபரப்படைந்துள்ளது. அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஊழியர் சம்மேளனம் (AISBISF) இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், வேலைநிறுத்தம் மே 25 ஆம் தேதி தொடங்குவதால், அதற்கு முந்தைய சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளுக்குப் பிறகு, மே 27 ஆம் தேதி ஈத் பண்டிகை விடுமுறையும் வர வாய்ப்புள்ளதால், வங்கிப் பணிகள் பல நாட்கள் பாதிக்கப்படலாம்.
முக்கிய கோரிக்கைகள் என்ன?
ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, போதுமான அளவு புதிய ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆயுதமேந்திய காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதாகும். இது தவிர, தேசிய பென்ஷன் சிஸ்டத்தில் (NPS) உள்ள ஊழியர்களுக்கான பென்ஷன் நிதி மேலாளரை (Pension Fund Manager) மாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை கொடுப்பது ஆபத்து
நிரந்தர வேலைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு (Outsourcing) கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதும் ஒரு முக்கிய கோரிக்கையாகும். இப்படிச் செய்வதால், தரவு கசிவுகள் (Data Leaks), மோசடிகள் மற்றும் அடையாள திருட்டு போன்ற பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்றும், வங்கிக்கு சட்ட மற்றும் நற்பெயர் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
இயக்குனர் நியமனம் கோரிக்கை
மேலும், வங்கியின் இயக்குநர் குழுவில் (Board) ஊழியர்களின் பிரதிநிதியாக ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர். இது சட்டப்பூர்வ உரிமை என்றும், பிரதிநிதி சம்மேளனம் அளிக்கும் பட்டியலில் இருந்து ஒருவரை நியமிக்க வழிவகை இருந்தும், அது தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
